கொல்கத்தா pt web
இந்தியா

கொல்கத்தா: கைவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.. “நீதி கிடைக்கும்வரை நகரமாட்டோம்” - மருத்துவர்கள்!

PT WEB

பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிட முடியாது என கொல்கத்தா மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், அதனை மருத்துவர்கள் நிராகரித்துள்ளனர்.

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு திரும்புவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனை மேற்குவங்க அரசு உறுதி செய்ய வேண்டும், போராடும் மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை பணிக்குத் திரும்பப் போவதில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கொல்கத்தா காவல் ஆணையரை நீக்க வேண்டும், சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவக்கல்வி இயக்குநர் ஆகியோரையும் மாலை 5 மணிக்குள் நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம்தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், அன்று முதல் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ஆர்ஜி கர் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் நீதிமன்றக் காவல் வரும் 23 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.