மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் கர் அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, கருத்தரங்கு நடைப்பெறும் நான்காவது மாடியில் உள்ள அறையில் பெண் மருத்துவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இவர், இதே மருத்துவமனையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயிலும் மாணவர் என்பது தெரியவந்ததுள்ளது.
இவரின் உடலின் பல பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், இவர் தற்கொலை செய்யவில்லை எனவும், மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்ப்பட்டுதான் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இந்நிலையில், அக்கல்லூரியில் பயின்று வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் இம்மாணவியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், நீதி கேட்டும், ’தங்களுக்கு இனி பாதுகாப்பு இல்லை’ என்று கூறியும் மெழுவர்திகளை ஏந்தி கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால், அம்மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சரியான சிகிச்சை இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்தான், இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் புளூடூத் ஹெட்போன் கொலை நடந்த இடத்தில் கிடந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளிலும் இவர் பதிவாகியுள்ளார். எனவே, சஞ்சய் ராய்தான் இக்குற்றத்தினை செய்தவர் என்பது முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
இந்நிலையில்தான், இந்த சம்பவத்தை மம்தா பானர்ஜி மூடி மறைக்க பார்க்கிறார் என்று பாஜகவின் குற்றம்சாட்டினர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, ”இந்தவழக்கில் இளநிலை மருத்துவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்.
இவ்வழக்கை சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என்றாலும் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளேன். தேவைப்பட்டால், குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள், ஆனால் நான் மரண தண்டனைக்கு ஆதரவாக இல்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்வழக்கானது சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை இது குறித்து தெரிவிக்கையில், “ என் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த உண்மையை மறைக்க சிலர் முயற்சிக்கிறார்கள் .” என்று தெரிவித்துள்ளார்.