இந்தியா

நாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்?

நாய்க்குட்டிகளை இரக்கமின்றி கொல்லும் ‘சைகோ’ - யார் இவர்?

webteam

இரக்கமற்ற சைகோ மனநிலை கொண்ட ஒரு கொடூரன் 15 நாய்க்குட்டிகள் மற்றும் ஒரு நாயை கொன்ற துயரச் சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

விலங்குகளுக்கும், கால்நாடைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க எத்தனையோ நல அமைப்புகள் வந்துள்ள போதிலும், விலங்குகள் மற்றும் கால்நடைகள் இரக்கமின்றி கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரத்தில் நிகழ்ந்துள்ளது. 

கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் சில மூட்டைகள் கிடந்துள்ளன. அந்த வழியாக, அங்கு பணிபுரியும் புதுல் ராய் என்பவர் நடந்து செல்லும்போது, ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிய ஒரு நாய் வெளியே வர முயற்சித்துள்ளது. கண்ணீருடன் கதறிய அந்த நாயை கண்டதும், “உதவிக்கு யாரேனும் வாருங்கள்” என்று கூச்சலிட்டபடி, ராய் அந்த நாயை மூட்டையில் இருந்து வெளியே எடுத்துள்ளார். அந்த நாய் படுகாயத்துடன் ரத்தம் வழிய உயிருக்கு போராடியுள்ளது. 

அங்கிருந்த மற்ற மூட்டைகளில் அதேபோன்று படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் 15 நாய்க்குட்டிகள் கொடூரமாக கொல்லப்பட்டு இருந்துள்ளன. அதில் இரண்டு நாய்க்குட்டிகளில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்து, மூட்டைக்கு வெளியே வந்த பின்னர் இறந்துள்ளன. இதற்குள் அங்கு மருத்துவமனையில் இருந்தவர்களின் கூட்டம் கூடிவிட்டது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த நாய்க்குட்டிகளின் உடலை கைப்பற்றி, கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நாய்கள் அனைத்தும் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டிருப்பதும், அவற்றிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த நாய்களுக்கு பிஸ்கட்டில் விஷம் கலந்துகொடுத்து, அவை மயங்கி பின்னர் மூட்டைக்குள் அடைத்து கடுமையாக தாக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனை வளாத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அதன் மூலம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், கொலையாளி ஒரு கொடூர சைகோ மனநிலை கொண்டவராக இருக்கலாம் என கணித்துள்ளனர். 

அத்துடன் அந்த நபரால் மேலும் பல நாய்க்குட்டிகள் மற்றும் நாய்கள் கொல்லப்படலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை துணை முதல்வர் கூறும்போது, தங்கள் வளாகத்தில் பல நாய்கள் சுற்றித்திரிவதாகவும், ஆனால் கொல்லப்பட்டு கிடந்த நாய்களில் ஒன்று தங்கள் வளாகத்தை சேர்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார். விலங்கு நல ஆர்வலர்கள் கூறும்போதும், குற்றவாளியை கண்டுபிடித்து அவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், நாய்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.