சஞ்சய் ராய் எக்ஸ் தளம்
இந்தியா

மருத்துவர் கொலை|போலீஸ் கமிஷனர் பெயரில் டூவீலர்..திடீர் திருப்பங்களால் சிபிஐ முன் நிற்கும் கேள்விகள்!

கொல்கத்த பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர் ஓட்டிய டூவீலர், போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தன்று, சஞ்சய் ராய் அதிக மது குடித்திருந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்றிருந்ததாகவும், அதன்பின்னரே மருத்துவமனை வளாகத்திற்குள் அவர் நுழைந்ததாகவும் சிபிஐ விசாரணை தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அவர் வைத்திருந்த டூவீலர், போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டது என தெரிய வந்துள்ளது. அந்த டூவீலர், 2014இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, அந்த டூவீலர் மூலமே அவர் சிவப்பு விளக்குப் பகுதிகளில் சுற்றியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே, இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. கொல்கத்தா போலீசில் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரித்துள்ளது. அப்போதுதான் இதன் விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி, அந்த பைக் போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டதை மாநில காவல் துறையினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தவிர, அனைத்து அரசு வாகனங்களும் போலீஸ் கமிஷனர் பெயரில் பதிவு செய்வது வழக்கமான நடைமுறைதான் என அவர்கள் சிபிஐயிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: 1 கிலோ ஜிலேபி வாங்கி வா’- புகார்கொடுக்க சென்றவரிடம் உத்தரவிட்ட போலீஸ்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்!

முன்னதாக, சஞ்சய் ராய்க்கு பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது, தாம் அறைக்குச் செல்லும்போதே அந்தப் பெண் இறந்துகிடந்ததாகவும், அதைப் பார்த்ததும் தாம் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு இருந்த அவர், தற்போது பாலிகிராப் சோதனையில் தெரிவித்திருக்கும் பதிலும் வேறுவேறாக உள்ளதால், மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.

அப்படியெனில், முதலில் கொலையை சஞ்சய் ராய் ஒப்புக்கொண்டதாக கொல்கத்தா போலீஸ் கூறியது ஏன்? தற்போது சஞ்சய் ராய் குற்றத்தை மறுத்திறுக்கும் நிலையில், அந்த கொலையை செய்தது யார்? தன்னை இதில் சிக்கவைத்திருப்பாக சஞ்சய் ராய் கூறுகிறார். அப்படியெனில் இதில் சம்பந்தப்பட்டவர் யார்? தவிர, சஞ்சய் ராய் பெண் மருத்துவர் இறந்ததைப் பார்த்ததும் ஓடியதாகக் கூறியிருக்கிறார். அப்படி இருக்கையில், அவருடைய ப்ளூடூத் அங்கே எப்படி கிடந்தது? என சிபிஐ முன்பு பல கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இந்த சம்பவத்தில் மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறது.

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி இன்று (ஆக.27) கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மருத்துவ மாணவர்கள் நடத்தினர். ஆனால் போலீசார் இந்த போராட்டத்துக்கு அனுமதி தரவில்லை. அத்துடன் மாணவர்களின் போராட்டத்தை ஹவுரா பாலம் மற்றும் சந்த்ராகச்சி ஆகிய இடங்களிலேயே தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியும் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கினர்.

இதையும் படிக்க: அசாம் | முகநூலில் இந்தியாவுக்கு எதிராக லைக்.. சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட வங்கதேச மாணவி!