காங்கிரஸ், பாஜக pt web
இந்தியா

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்; ஆட்சியைத் தீர்மாணிக்கும் கோல்ஹான் பகுதி.. ஏன் அவ்வளவு முக்கியம்?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு கோல்ஹான் பிராந்தியத்தில் பெரும் வெற்றியைப் பெற வேண்டும். ஏன் இந்த பிராந்தியம் அவ்வளவு முக்கியம், அரசியல் காய் நகர்த்தல்கள் என்னென்ன போன்றவற்றை விரிவாக காணலாம்.

நிரஞ்சன் குமார்

இரண்டு கட்டங்களாக ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை பிடித்துவிடும் நோக்கில் பாஜகவும் இருக்கும் நிலையில், இரு தரப்பின் தலைவிதியை நிர்ணயிக்கப்போவது இங்குள்ள கொல்ஹான் (kolhan) பிராந்தியம்தான்.

இதுவரையிலான 7 முதலமைச்சர்களில் அர்ஜுன் முண்டா, மது கோடா, சம்பை சோரன் மற்றும் பழங்குடியினர் அல்லாத முதல் நபரான தாஸ் என நான்கு முதலமைச்சர்களை வழங்கிய பிராந்தியம் இது.

கோல்ஹான் பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில், ஒன்பது பட்டியல் பழங்குடி (ST) வேட்பாளர்களுக்கும், ஒன்று பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள நான்கு தொகுதிகள் பொது இடங்களாகும். எனவே சமுதாய ரீதியிலான கணக்கீடுகளும் மிக மிக முக்கியம்.

2019ஆம் ஆண்டில், கிழக்கு சிங்பூம், மேற்கு சிங்பூம் மற்றும் சரைகேலா-கர்சவான் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பிராந்தியத்தில் உள்ள 14 இடங்களில் 11 இடங்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வென்றது. 2 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இங்கு முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் சேர்ந்து தனது அரசியல் குருவான சிபு சோரனின் மகனும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரனை எதிர்த்து களம் காண்கிறார். அவரது இந்த அரசியல் மாற்றம் இந்த பிராந்தியத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய வலு சேர்க்கும் என சொல்லப்படுகிறது.

ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் ஏற்பட்டுள்ள பிளவு, பாஜகவின் வியூகம் ஆகியவை இந்த முறை ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பிராந்தியத்தில் 2 முறை வந்து பிரதமர் பரப்புரை செய்துள்ளார். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கனமழை பெய்தபோதும் அவர் ஜம்ஷத்பூரில் சாலை பேரணியை நடத்தினார். குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறும் பாஜக, கீதா கோடா போன்ற குடும்ப உறுப்பினர்களுக்குதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது, தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தீவிரமாக களமாடுகிறது. இதனால் ஜார்க்கண்ட் தேர்தல் களத்தில் அனல் வீசுகிறது.