இந்தியா

“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை

“கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை”- புதிய சர்ச்சை

webteam

கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திருடிச் செல்லவில்லை. அது லாகூர் மகாராஜாவால் வேறு வழியின்றி கொடுக்கப்பட்டது என தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆர்.டி.ஐ.க்கு பதில் அளித்துள்ளது.

14ம் நூற்றாண்டில் இந்தியாவின் ஆந்திர மாநில சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது கோஹினூர் வைரம். 105 காரட் மதிப்பு கொண்ட அந்த  வைரம்தான் தற்போது வரை உலகின் மிகப் பெரிய வைரம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு சொந்த மான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்ததாக கூறப்படுகிறது. 

இந்த வைரத்தை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச்சென்றதாக ஒரு தரப்பினரும் கூறினாலும், இது பிரிட்டிஷ் மன்னர் பரம்பரைக்கு பரிசாக வழங்கப்பட்டது என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். தற்போது மகாராணியின் மகுடத்திலுள்ள இந்த வைரத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம் கொள்ளையடிக்கப்படவில்லை அது அன்பளிப்பாகவே கொடுக்கப்பட்டது. அதனை திருப்பி கேட்க முடியாது எனத் தெரிவித்தது.

இந்நிலையில் கோஹினூர் வைரம் குறித்து ரோஹித் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அந்தக் கேள்வியை அனுப்பியது மத்திய அரசு. அதன்படி கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திருடிச்செல்லவில்லை; லாகூர் மகாராஜாவால் வேறு வழியின்றி கொடுக்கப்பட்டது என இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.