இந்தியா

தந்தையை தலைகுனிய வைத்த தனயன்கள்... கொடியேரி பாலகிருஷ்ணனை துரத்தும் துயரம்!

தந்தையை தலைகுனிய வைத்த தனயன்கள்... கொடியேரி பாலகிருஷ்ணனை துரத்தும் துயரம்!

webteam

தனது இரண்டு மகன்களின் தனிப்பட்ட நடவடிக்கையால் பதவி விலகும் முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன்.

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று கூறி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இடைக்கால தலைவராக விஜயராகவன் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள சி.பி.எம் மாநிலச் செயலாளராக 2015ல் கொடியேரி முதல்முறையாக பதவியேற்றுக்கொண்டார். அதன்பின் இரண்டாம் முறையாக 2018 மீண்டும் மாநிலச் செயலாளராக வந்தார். இதுவரை இருந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர்களிலேயே அதிக செல்வாக்கு மிகுந்த நபராக வலம்வந்தவர் கொடியேரி. 2015-ல் சி.பி.எம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததுக்கும், பினராயி முதல்வர் ஆனதற்குப் பின்னால் இருக்கும் இவரின் பங்கு அளப்பரியது. மேலும், பினாரயி உடன் அதிக நெருக்கம் கொண்டவரும்கூட. இதனால்தான் 2018-ல் மீண்டும் மாநிலச் செயலாளர் பொறுப்பு அவருக்குத் தேடிவந்தது.

இப்படிப்பட்ட கொடியேரி உடல்நிலை காரணமாக பதவி விலகியிருக்கிறார் என்றால், அதை அம்மாநில குழந்தைகள்கூட நம்ப மாட்டார்கள். கடந்த சில நாட்களாக கொடியேரியையும், அவரின் குடும்பத்தையும் சுற்றி என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இது அனைத்தும் அவரின் மகனால் வந்தது என்பதும் அனைவரும் அறிவர். இதோ தற்போது அவரின் கட்சியினரும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். எல்லாம் கொடியேரியின் மகன்களால் வந்த வினை என்று குமுறி வருகின்றனர். ஆம்... அவர்கள் சொல்வதுபோல் தனது மகன்களால் தொடர் சோதனைகளை சந்தித்து வருகிறார் கொடியேரி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கொடியேரி பாலகிருஷ்ணன் - வினோதினி தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெயர் பினோய் கொடியேரி, மற்றொருவர் பினிஷ் கொடியேரி. இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல, வழக்குகளில் மாட்டிக்கொண்டு தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார்கள். இதில் முதலில் சிக்கலை தந்தவர், கொடியேரியின் இரண்டாவது மகன் பினோய் கொடியேரி.

பார் டான்சரை கழட்டிவிட்ட பினோய்!

சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் இருந்த பினோய், அங்கு குடிப்பதற்காக பாருக்கு செல்வது வழக்கம். தினமும் அங்கு செல்லும்போது, அங்கு டான்சராக இருந்த இளம்பெண்ணுடன் பழகி, அவருடன் தனிக்குடித்தனம் நடத்தியுள்ளார். இதில் இருவருக்கும் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்தக் குழந்தைக்கு தற்போது 10 வயது ஆகும் நிலையில், அந்தப் பெண்ணை பினோய் ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்ட அந்தப் பெண் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால் சென்ற ஆண்டு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சம்பந்தப்பட்ட பெண் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக இருக்கிறேன் எனக் கூற, பினோய் தலைமறைவானார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குடைச்சல் மேல் குடைச்சலாக கொடுத்து கொடியேரியை ஒருவழி பண்ணியது.

எனினும், ``என் மகன் பினோய் தனிக் குடித்தனமாக வாழ்கிறார். நான் தினமும் அவனை கண்காணிக்கவில்லை. அப்படி கண்காணித்து இருந்தால் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்காது. பாலியல் புகாருக்கு பின் என் மகனை நான் சந்திக்கவில்லை. அவன் தனியாக இந்த வழக்கை சந்தித்து வருகிறான். அதனால் கட்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பினோய் வழக்கில் சமரசம் பேச யாரும் முயற்சி செய்யவில்லை. இது சம்பந்தமாக எந்த உதவியும் நான் செய்யமாட்டேன் என்று என் மனைவியிடம் தெரிவித்துவிட்டேன்" என்று ஸ்டேட்மென்ட் விட்ட பின்பு தான் இந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்தது. இதற்கிடையே, இதே பினோய் பண மோசடி வழக்கில் ஒன்றில் சிக்கியது தனிக்கதை!

தம்பியை மிஞ்சிய அண்ணன்!

பினோய்தான் இப்படி என்றால் கொடியேரியின் மூத்த புத்திரன் பினீஷ் அதற்கு ஒருபடி மேல். இளம்வயதிலேயே கல்லூரியில் அடிதடி வழக்கு, அதன்பின் பாலியல் வழக்கு என பல வழக்குகளை சந்தித்து வந்தவர் என்று இந்த பினீஷ் கொடியேரிமீது அப்போதே பல்வேறு புகார்கள் வாசிக்கப்பட்டது.

எனினும், திரைப்பட நடிகர், கிரிக்கெட் வீரர், பிசினஸ் மேன் என வெளியுலகில் தன்னை இதுவரை ஒரு பெரிய மனிதராக காட்டிக்கொண்டுவந்த பினீஷ்க்கு தங்க கடத்தல் வழக்கு வினையாக வந்து அமைந்தது. தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முகமது அனூப், பினீஷின் நெருங்கிய நண்பர். இருவர் இடையேயும் பணம் கொடுக்கல், வாங்கல் அதிகமாக இருந்துள்ளது. இந்த அனூப் தான் பெங்களூருவில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளார்.

இந்த விசாரணையின்போது பினீஷ்க்கு பணம் கொடுத்த விவகாரத்தை சொல்ல, அமலாக்கத்துறை பினீஷை கொத்தாக தூக்கி விசாரித்தது. விசாரணைக்கு இடையே, நேற்று பினீஷை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில்தான், கொடியேரி பாலகிருஷ்ணன் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தற்போதைக்கு தற்காலிகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவு காலம் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மாநிலச் செயலாளர் விடுப்பில் செல்லும்போது, அவரது பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது. கேரள முதல்வர் பினராயி விஜயன் 17 ஆண்டுகளாக கட்சியின் செயலாளராக இருந்தபோது ஒருமுறை கூட கட்சியின் பொறுப்பு அவரது கட்சியின் சக ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. அதேபோல் கொடியேரி 2019 அக்டோபரில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார், ஆனால் அவர் இல்லாத நேரத்தில் வேறு யாரையும் மாநிலச் செயலாளராக நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.