இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

webteam

நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை ஆகிய இரு அவைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் மக்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். ஆனால் மாநிலங்கள் அவைக்கு மக்கள் நேரடியாக எம்பிக்களை தேர்ந்தெடுக்க முடியாது. மாநிலங்களவைக்கு எம்பிக்களை சட்டமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்து அனுப்பி வைக்கின்றனர். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 80-ன்படி மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 238பேர் தேர்தல் மூலமும் மீதமுள்ள 12பேர் நியமனம் மூலம் எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால் தற்போது மாநிலங்களவையில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 245. இவர்களில் 233 பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அத்துடன் 12 பேர் எம்பிக்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களில் நியமனம் செய்யப்படும் எம்பிக்கள் 12 பேர் கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றில் சிறந்தவர்களாக விளங்கியிருக்கவேண்டும் என்பது விதி. மேலும் மாநிலங்களவைக்கான மாநில எம்பிக்களின் எண்ணிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 4ல் கொடுக்கப்பட்டுள்ளது.  
 
மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். அவ்வாறு முடிவடையும் எம்பிக்களின் பதவிகளுக்கு அவ்வப்போது இந்திய தேர்தல ஆணையம் தேர்தல் நடத்தும். இந்தத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional representation by single transferrable vote) அடிப்படையில் நடைபெறுகிறது. இதன்படி ஒரு வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெறவேண்டும்.

இந்தக் குறிப்பிட்ட அளவு வாக்குகள் ஒரு அளவீடு மூலம் நிர்ணயக்கப்படுகிறது. அதாவது வெற்றிப் பெறவேண்டிய 
வாக்குகள்= (மொத்தமுள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை) X 100/ (காலியிடங்கள்+1))+1 என்ற அளவீட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது. 

உதராணமாக தற்போது ஒரு மாநிலத்தில் 234 எம்.எல்.ஏக்கள் மற்றும் அம்மாநிலத்திற்கு 6 காலியிடங்கள் மாநிலங்களையில் உள்ளது என்றால் வெற்றிக்கு தேவையான வாக்குகள் என்பது 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள். 

வெற்றி பெற தேவையான வாக்குகள்= ((234x100)/(6+1))+1
வெற்றி பெற தேவையான வாக்குகள்=  3343.85 
அதாவது ஒரு எம்.எல்.ஏயின் வாக்கு 100 வாக்குகளாக கணக்கிடப்படுகிறது. அதை வைத்து பார்க்கும் போது தற்போது 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் ஒரு எம்பி வெற்றிப் பெற முடியும். 

மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கு 18 எம்பிக்கள் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 எம்பிக்களின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய போகிறது. இதனையடுத்து அதற்கான தேர்தல் நடைபெற்றால் ஒருவர் எம்பியாக தேர்வாக 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவிற்கு 123 எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுகவிற்கு 101 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் இந்த இருக்கட்சிகளுக்கும் காலியாக போகின்ற 6 இடங்களில் தலா 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.