இந்தியா

“கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா” - டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

“கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா” - டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

rajakannan

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, “கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா” என்ற முழக்கத்துடன் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குஜராத், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில், இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல், கடன் நிவாரணம், விளைபொருட்களுக்கு உரிய விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கு தனியாக கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

டெல்லியின் பல்வேறு பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றனர். விவசாயிகள் நாளை அங்கிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக செல்லவுள்ளனர். இந்த பேரணியில் விவசாயிகள் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். சிலர் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். “கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா” என்ற முழக்கங்களை விவசாயிகள் எழுப்பினர். மூத்த வழக்கறிஞரும், சுவராஜ் அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் இந்தப் பேரணியில் கலந்து கொண்டார். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விவசாயிகள் போராட்டத்தில், முதல் நாளான இன்று ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளுக்காக கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. முக்கிய பாடகர்கள் பாடல்கள் பாடுகிறார்கள். கவிஞர்கள் கவிதைகள் வாசிக்கிறார்கள். இரண்டாவது நாள், நாடாளுமன்ற சாலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தவிர்த்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். 

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். டெல்லி ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ரயிலை மறித்த அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். பின்னர் டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ராம்லீலா மைதானம் வரை மண்டை ஓடு, எலும்புகளுடன் ஊர்வலமாக சென்றனர்.