18வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிவுற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதில் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 14 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில் தேர்தலின்போது, அம்மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கிரோடி லால் மீனாவின் பொறுப்பில் 7 தொகுதிகள் (தௌசா, பரத்பூர், கரௌலி-தோல்பூர், அல்வார், டோங்க்-சவாய்மாதோபூர் மற்றும் கோட்டா-பூண்டி உள்ளிட்ட கிழக்கு ராஜஸ்தான்) ஒதுக்கப்பட்டிருந்தன. இத்தொகுதிகளின் பிரசாரத்தின்போது, ”நான் பிரசாரம் செய்த 7 தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெல்லும். இதில் ஒரு தொகுதியில் பாஜக தோல்வியடைந்தாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்” என தெரிவித்திருந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகளின்போது இவருடைய பொறுப்பில் இருந்த 4 தொகுதிகள் (தௌசா, பாரத்பூர், கரௌலி-தோல்பூர் மற்றும் டோங்க்-சவாய் மாதோபூர்) தோல்வியைத் தழுவின. இதையடுத்து கிரோடி லால் மீனா மிகவும் மனவருத்தம் அடைந்தார். அதோடு, அவர் தனது துறை சார்ந்த அலுவலகங்களுக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில்தான் 4 தொகுதிகளில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான கடிதத்தை அவர் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கி உள்ளார். இதுபற்றி கிரோடி லால் மீனாவின் உதவியாளர், ”கிரோடி லால் மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் 10 நாட்களுக்கு முன்பே முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் வழங்கினார்'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா என்பது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.