கிரண் ரிஜூஜூ, அசாதுதீன் ஓவைசி, திருமாவளவன் pt web
இந்தியா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா அறிமுகம்: “காங்கிரஸ்க்கு இதுதான் வேலை” - கிரண் ரிஜூஜூ குற்றச்சாட்டு

Angeshwar G

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா

பலத்த எதிர்ப்புக்கிடையே வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. வக்ஃப் நிலங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும், வருடாந்திர நிதி குறைப்பு என பல அம்சங்கள் சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவின் அம்சங்கள்!!

எதிர்க்கட்சிகள் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும் போதே, அதற்கு பல்வேறு கண்டனங்களை தெரிவித்தனர். இந்த மசோதாவை தற்போது தாக்கல் செய்யக் கூடாது என்றும், அப்படி தாக்கல் செய்ய வேண்டுமென்றால் நாடாளுமன்ற நிலைக்குழு பரீசிலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.

"மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களை குறிவைக்கிறது" - கே.சி.வேணுகோபால்

வக்ஃப் சட்டத்திருத்தம் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. மத சுதந்திரத்திற்கு எதிரானது என ஓவைசி, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்திய நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ அதற்கு பதிலளித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் வேலை

அப்போது பேசிய அவர், “இந்த மசோதா பல்வேறு குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதில் நாடாளுமன்ற குழுக்கள் மற்றும் பல்வேறு ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளும் அடங்கும். அதனடிப்படையிலேயே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வக்ஃப் முறைக்கேடுகள் தொடர்பான புகார்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளன. ஆகவேதான், இத்தகைய மசோதாக்கள் மூலம் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன” என தெரிவித்தார்.

WaqfBoardBill KirenRijiju

கிரண் ரிஜூஜூ பேசிக்கொண்டிருந்த போதே எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தபின் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய கிரண் ரிஜூஜூ, “காங்கிரஸ் கட்சி இத்தகைய கேள்விகளை எழுப்பிவிட்டு பின் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. தமிழகத்தில் திருச்செந்துறை கிராமம் மொத்தமாகவே வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலைப் போலவே பல்வேறு மாநிலங்களில் உள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காகக் கூட வக்ஃப் நிலம் பயன்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் ஹரீஸ் பாலயோகி, “தேவைப்பட்டால் இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கோ அல்லது வேறு ஏதேனும் சிறப்புக் குழுவுக்கோ அனுப்பலாம். குழு தொடர்பான பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன” என தெரிவித்தார். இந்த மசோதாவிற்கு I.N.D.I.A. கூட்டணியில் இல்லாமல், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குறிய இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும் சூழலிலேயே கடும் எதிர்ப்பினை சந்தித்து வருகிறது.