இந்தியா

கணவர் கொடுமையால் அமெரிக்காவில் தற்கொலை செய்த மகள்.. கண்ணீருடன் பெற்றோர் வைக்கும் கோரிக்கை!

கணவர் கொடுமையால் அமெரிக்காவில் தற்கொலை செய்த மகள்.. கண்ணீருடன் பெற்றோர் வைக்கும் கோரிக்கை!

சங்கீதா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் மன்தீப் கவுரின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அவரது உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் நகரைச் சேர்ந்த மன்தீப் கவுர் என்ற 30 வயதான பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ரஞ்சோத்வீர் சிங் சந்து என்பவருடன் திருமணம் நடந்தது. இதன்பின்னர் இந்தத் தம்பதியினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றனர். இந்தத் தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மன்தீப் கவுர் அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதி திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு நாட்டையே சோகத்தில் ஆழ்த்தினார்.

அந்த வீடியோவில் மன்தீப் கவுர், "என் மரணத்திற்கு எனது கணவர் மற்றும் மாமியாரும் தான் காரணம். அவர்கள் என்னை வாழ விடவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இந்த சித்திரவதையை என்னால் இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் துன்புறுத்தலை புறக்கணித்துவிட்டுத் தான் நான் இங்கு நியூயார்க் வந்தேன். ஆனால், இங்கும் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமாம். மேலும் வரதட்சணையாக ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று என்னை தாக்கி துன்புறுத்தல் செய்கின்றனர்.

நான் என் குழந்தைகளை விட்டு உலகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்குச் செய்த கொடூரத்திற்கு எல்லாம் அவர்கள் கடவுளிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். எனது கணவருக்கு பல வருடங்களாக திருமணத்திற்கு புறம்பான பல உறவுகள் இருக்கிறது” என்று அழுகையுடன் மன்தீப் கவுர் பேசிய வீடியோவும் வெளியாகி நெஞ்சை உலுக்கியது.

மற்றொரு வீடியோவில், மன்தீப் கவுர் அடிக்கப்படும் காட்சிகள் வெளியிடப்பட்டு இருந்தன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து மன்தீப் கவுருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பலரும் குரல் எழுப்பினர். 

இந்நிலையில் மன்தீப்பின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவரது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சந்துவிற்கு கடும் தண்டணை விதிக்க வலியுறுத்தியும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆன்லைன் மூலம் அவரின் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

மேலும் தனது மகள் மன்தீப் கவுரை தான் காப்பாற்ற முடியவில்லை, ஆனால் அவரது மகள்கள் இருவரது எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் தங்களுடன் அவர்களை கொண்டுவந்து சேர்க்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 6,000 பேர் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.