செய்தியாளர்: மகேஷ்வரன்
வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தற்போது முகாம்களில் உள்ளனர். முகாம்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்குவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பேரிடரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அந்திக்காடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
அதன் விளைவாக அந்திக்காடு பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 645 பள்ளி மாணவர்கள் 3 தினங்களில் சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் பொம்மைகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நோட்டு புத்தகங்கள், பேனா மற்றும் பென்சில்களையும் சேகரித்தனர்.
இதையடுத்து சேகரிக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் பாட புத்தகங்களை உள்ளடக்கிய பொருட்கள் தனித்தனி வாகனத்தில் திருச்சூர் மாவட்டத்திலிருந்து வயநாடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட பொருட்களை வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். பேரிடரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள குழந்தைகளின், துயரை துடைப்பதற்கு பள்ளி குழந்தைகள் கையில் எடுத்த இந்த முயற்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.