ஹரியானா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் நாளை பதவி ஏற்கிறார். மேலும் துணை முதல்வராக ஜனநாயக ஜனதா தளம் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க இருக்கின்றார்.
ஹரியானா மாநில ஆளுநரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கட்டார் "ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினோம். அதனை ஏற்ற ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். என்னுடைய ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இதனையடுத்து நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஹரியானா முதல்வரா பதவியேற்கிறேன், ஜனநாயக ஜனதா தளம் கட்சியின் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக பதவியேற்கிறார்" என தெரிவித்தார்.
ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. ஜனநாயக ஜனதா தளம் கட்சி 10 இடங்களில் வெற்றிப் பெற்றது. ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவைப்படுவதால் எந்தக் கட்சியும் தனியாக ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானது. இதனால் ஹரியானாவில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா தளம் கட்சிகளிடையே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி உறுதியாகியுள்ளது. அதன்படி பாஜக ஹரியானாவில் மீண்டும் ஆட்சியமைக்க ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.