கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் கே.ஜி. போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் வேண்டும்
என்பதால், சட்டப்பேரவை செயலாளர் மூர்த்தி இரண்டு நபர்களை தாற்காலிக சபாநாயகராக பரிந்துரை செய்தார். இதனால் மூர்த்தி
பரிந்துரை செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே அல்லது பாஜகவை சேர்ந்த உமேஷ் கர்தி ஆகியோரில் ஒருவரை
கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை
ஆளுநர் நியமனம் செய்தார்.
ஆனால் போபையா தாற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு, காங்கிரஸ் மற்றும் மஜத கடும் அதிருப்தி
தெரிவித்துள்ளது. அத்துடன் அவரது நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளது. அத்துடன்
மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நம்பிக்கை
வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ்
கோரிக்கை விடுக்கும் போது, வாக்குவாதம் ஏற்பட்டதால், பதிவாளரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ்
கோரிக்கைப்படி இது அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டால், இரவு விசாரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.