அயோத்தி ராமர் கோவில் - KFC முகநூல்
இந்தியா

அயோத்தியில் KFC-க்கு அனுமதி இல்லையா?

அயோத்தி ராமர் கோவில் எல்லைக்குள் சைவ உணவுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், கேஎஃப்சி நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

அயோத்தியில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் பிராண பிரிதிஷ்டை விழா நடைபெற்றது. இதன் பிறகு இங்கு வரும் ராம பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாகவே பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் மக்களின் உணவு தேவை என்பது நிச்சயம் மாறுபடும். இதனால் ஒவ்வொரு சுற்றுலா தளத்திலும் உணவு மற்றும் உறைவிடம் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் கால்பதிக்கும். அந்தவகையில் அயோத்திக்கு வரும் மக்களுக்கு ஏற்றார் போல தங்கும் மனைகள், உணவு நிறுவனங்கள் என்று பிரபல முன்னனி நிறுவனங்கள் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் அயோத்தியின் எல்லைக்கும் அசைவத்திற்கு இடம் உண்டா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில்

இதற்கான பதிலையும் அரசு அதிகாரி ஒருவரே கோயில் தரப்பில் தெரிவித்துவிட்டார். அதன்படி அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றி 15 கிமீ எல்லைக்கும் அசைவ மற்றும் மதுபானங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அமெரிக்காவின் பிரபல கேஎஃப்சி உணவகமும் அயோத்தி ராமர் கோவில் எல்லைக்குள் அமைக்கப்படாமல் லக்னோ சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் டோமினோஸ் உணவகம், ‘சைவ உணவுகளை மட்டுமே பரிமாறுவோம்’ என்று, கோவில் நிர்வாகனத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு, ராமர் கோவிலில் இருந்து சுமார் 1 கிமீ எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கேஎஃப்சி உணவகமும் சைவம் மட்டுமே பரிமாறப்படும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டால், அயோத்தியின் எல்லைக்குள் அனுமதிக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அயோத்தியில் உள்ள அரசு அதிகாரி விஷால் சிங் தெரிவிக்கையில், “அயோத்தியில் தங்களது உணவகங்களை அமைக்க அனைத்து பெரிய நிறுவனங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு கட்டுப்பாடு உள்ளது. பஞ்ச் கோசி என்ற அழைக்கப்படும் அயோத்தி புனித பூமிக்குள் அசைவ உணவுகளை வழங்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் இதுவரை ரூ.8769 கோடி மதிப்பிலான 161 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் மாநில சுற்றுலாத் துறை ரூ.2020 கோடி மதிப்பிலான திட்டங்களை அங்கே தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில் ராம நவமியை குறிவைத்து அடுத்தடுத்த சிறப்பு ஏற்பாடுகளும் அங்கே செய்யப்பட்டு வருவதால் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி 10-12 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றன. இதனால் அங்கே போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.