கேசவ் பிரசாத், யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளம்
இந்தியா

உட்கட்சி மோதல்! முதல்வருக்கு எதிராக போர்க்கொடி.. ஓரங்கட்டப்படும் ஆதித்யநாத்.. உ.பி. அரசியலில் புயல்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் அமைவதற்கு கைகொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்வது உத்தரப் பிரதேசம். இம்மாநிலத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதேநேரத்தில் 2019இல் பாஜக 62 இடங்களைக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்தும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளை அக்கட்சி பெரிய அளவில் இழந்தது எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. தவிர, அக்கட்சி தனித்து ஆட்சியமைக்காமல் போனதற்கு இம்மாநிலத்தில் அக்கட்சிக்கு குறைந்த அளவே கிடைத்த எம்.பிக்களும் ஒரு காரணம். இதனால் அம்மாநில பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு வந்தது. தற்போது அது விஸ்வரூபமெடுத்துள்ளது.

yogi

முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படும் விதம் காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டதாக அக்கட்சியினரே குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபோல் பாஜக மாநிலத் தலைவர் புபேந்திர செளத்ரிக்கும் ஆதித்யநாத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, கடந்த வாரம் உத்தரப்பிரதேச பா.ஜ.க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத், ”அரசைவிட கட்சிதான் முக்கியம்” என்று பேசினார். இதற்குப் பதிலளித்து யோகி ஆதித்யநாத், ”அளவுக்கு அதிகமான நம்பிக்கை காரணமாகத்தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:பிராங்கால் ஏற்பட்ட விபரீத விளைவு.. மும்பை கட்டடத்தின் 3வது மாடியில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!

இந்த விவகாரம் டெல்லி பாஜக தலைமை வரை சென்றுள்ளது. உ.பி. பாஜக மாநில கட்டமைப்பில் முழுமையான மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கேசவ் பிரசாத் மவுரியா தரப்பு பாஜக தலைமையிடம் எடுத்துக் கூறியுள்ளது.

இது தவிர உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் புபேந்திர செளத்ரியும் டெல்லியில் தனியாக பாஜக தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், உ.பி. அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

விரைவில் அந்த மாநிலத்தில் 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இதில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் அதற்கான மாற்றங்களை மாநில பாஜக செய்ய இருக்கிறது. இதற்கு யோகி ஆதித்யநாத் தடை போடுவதாலேயே டெல்லி தலைமைக்குப் புகார் பறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, டெல்லி தலைமையும் உ.பி ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தீவிர ஆலோசனையில் உள்ளதாம். அதன்படி, விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் எனவும், யோகி ஆதித்யநாத் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் ஓய்வு ஏன்| மனைவி, மகனுடன் செர்பியா புறப்பட்ட ஹர்திக்?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி?

இதற்கு முக்கியக் காரணமும் சொல்லப்படுகிறது. நடைபெற்று முடிந்த தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் சஞ்சீவ் ப்ல்யானுக்கும், சங்கீத் சோமுவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவியது. இதுவே உ.பி. மாநில பாஜகவில் பிளவு ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது, சஞ்சீவ் பல்யான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான நபராகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சங்கீத் சோமு முதல்வர் ஆதித்யநாத்தின் ஆதரவாளராக அறியப்படுகிறார்.

இந்த நிலையில் முசாபர் நகர் தொகுதியில் போட்டியிட்ட பல்யான் தோற்றதற்குக் காரணமே சங்கீத் சோமுதான் எனக் கூறப்படுகிறது. அவர் அத்தொகுதியில் வலுவான முகமாக இருப்பதால் தாம் சார்ந்த சாதி ஓட்டுகளைப் பிரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஓட்டுகள் பல்யானுக்குச் சென்றிருந்தால் அவர் நிச்சயம் வெற்றிபெற்றிருக்கலாம் என தேர்தல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் காரணமாகவே மாநில பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, ஜூலை 29-ஆம் தேதி தொடங்க உள்ள மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிக்க: திருமணமாகி 1 வருடம் ஆன நிலையில், கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி.. இன்ஸ்டாவில் பதிவு!