வயநாடு முகநூல்
இந்தியா

வயநாடு | "சந்தேகம் முழுமையாக தீரும் வரை தேடுதல் பணி தொடரும்" - உறுதியளித்த கேரள வனத்துறை அமைச்சர்!

PT WEB

வயநாட்டில் கடந்த மாத இறுதியில் நேரிட்ட நிலச்சரிவு எனும் பெருந்துயரை யாராலும் மறந்துவிட முடியாது. அந்தப் பகுதிகளில் நேரிட்ட பாதிப்புகளை மதிப்பிடவும், இனி என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை மதிப்பிடவும், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.

நிலச்சரிவு

இந்தக் குழுவினர் நேற்று, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வரும் 31 ஆம் தேதி வரை, இந்தக் குழுவினர், ஆய்வு செய்ய உள்ளனர். நேற்று நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு அவர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்திலும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய வனத்துறை அமைச்சர் எம்.கே.சசிதரன், “நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள், யானையடிகாப்பு முதல் சூஜிப்பாறை வரை உள்ள பகுதிகளில் தொடரும். பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் சந்தேகங்கள் முற்றிலும் தீரும் வரை தேடுதல் பணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார். அறிவியல் ரீதியாக ஒருங்கிணைந்த முறையில் ஆய்வுகள் நடைபெறுவதாகக் கூறிய குழுவின் தலைவர் பிரதீப்குமார், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகளும் மறுவாழ்வும் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.