இந்தியா

விமான விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற ரத்த தானம் செய்ய குவிந்த கேரளா இளைஞர்கள்!

JustinDurai

துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட 18 பேர் பலியானார்கள். பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் கேரளா முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த பயணிகள் குண்டோட்டி மெர்சி நிவாரண மருத்துவமனை மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பலரில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த பயணிகள் சிலருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதால் தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வருமாறு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து கோழிக்கோடு ரத்த வங்கியில் தன்னார்வலர்களும் இளைஞர்களும் வரிசையில் நின்று ரத்த தானம் அளித்தனர்.