air india espress twitter
இந்தியா

உயிருக்குப் போராடிய கணவர்.. பார்க்கப் புறப்பட்ட மனைவி.. விமானம் ரத்தானதால் நிகழ்ந்த சோகம்!

Prakash J

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். 39 வயதான இவர், மஸ்கட்டில் கடந்த 8 ஆண்டுகளாக ஐடி மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அம்ரிதா (24). இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து கேரளாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவர்களும் மஸ்கட் செல்லத் தயாராகினர். இதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடந்த மே 8ஆம் தேதி டிக்கெட் புக் செய்துள்ளனர்.

இதற்கிடையே விமான கேபின் பணியாளர்கள் பற்றாக்குறை (உடல்நிலை சரியில்லை எனக் கூறி பல ஊழியர்கள் விடுமுறை எடுத்துள்ளனர்) காரணமாக அன்றைய நாள், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்காக அடுத்தநாள் மஸ்கட்டிற்கு புறப்படுவதாக இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் ராஜேஷின் குடும்பத்தினர். எப்படியாவது மாற்று விமானத்தில் தன்னை மஸ்கட்டிற்கு அனுப்பிவைக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. தொடர்ச்சியாக அடுத்த 4 நாள்களுக்கு விமானங்களில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டதால், அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிக்க: பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை.. வடகொரியா அதிரடி!

இந்த நிலையில், அவரது கணவர், கடந்த மே 13ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அவரது குடும்பத்தினரின் மனதை மிகவும் காயப்படுத்தியது. இதற்கிடையே, ராஜேஷின் உடல், நாளை (மே 14) திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இவ்விவகாரம் தொடர்பாக விமான நிறுவனத்தின்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக ராஜேஷ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, இதுகுறித்த புகாருக்கு விமான நிறுவன மேலாளர் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனவும், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை அவர்கள் இன்னும் திரும்பப் பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தவறாக நிா்வகிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, உடல்நலம் சரியில்லை என்று கூறி, அந்த நிறுவன விமானிகளில் 100-க்கும் மேற்பட்டவா்கள் மே 7ஆம் தேதி இரவு முதல் பணிக்கு செல்லவில்லை. இதனாலேயே ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பயணப்பதில் காலதாமதம் ஏற்பட்டதுடன், நிறைய விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூ.81,000 கோடி லாபம்.. சாதனை படைத்த 3 எரிபொருள் விற்பனை நிறுவனங்கள்!