கேரளாவின் பொய்னாச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்ருதி (35) என்பவரை சமீபத்தில் மணந்திருக்கிறார். இந்த ஸ்ருதி, திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து நகை, பணம் போன்றவற்றை அபகரித்துக் கொண்டதாக அவரது கணவனே போலீஸில் புகாரொன்று அளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் உடுப்பியில் தலைமறைவாக இருந்த ஸ்ருதியை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் என்ன நடந்துள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்...
கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் மேட்ரிமோனியல் வலைதளத்தை பயன்படுத்தி, திருமணத்திற்கு வரன் தேடும் வசதியான ஆண்களைப் பார்த்து அவர்களுடன் பேசி வந்துள்ளார். பின் அவர்களிடமிருந்து பணம் மற்றும் பொருள்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மோசடி செய்துவிட்டு தொடர்பை துண்டித்து விடுவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இப்படி இவர்மீது நிறைய வழக்குகள் இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
இப்படி இவர் விரித்த வலையில் போலீஸ் உயர் பதவி வகிப்பவர் முதல் சாமானியர்கள் வரை பலரும் விழுந்துள்ளனர். இதில் கேரளா காவல்துறை எஸ்ஐயும் ஒருவர். இவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட ஸ்ருதி அவரிடமிருந்து 5 லட்சம் பணம் நகை போன்றவற்றை பறித்துக்கொண்டு, எஸ்ஐ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்திருக்கிறார். அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ மீது வழக்குப் பதியப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகும் ஸ்ருதி இன்ஸ்டாகிராம் மற்றும் மேட்ரிமோனியல் போன்ற வலைதளங்களை உபயோகப்படுத்தி, தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் வருமான வரித்துறை அதிகாரி என்றும் பலரையும் ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், நகை போன்றவற்றை பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்ட்ராகிராம் மூலம், பொய்னாச்சியை சேர்ந்த இளைஞரிடம் தன்னை இஸ்ரோ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதற்கான சில போலி ஆவணங்களை தயார் செய்து அந்த இளைஞரிடம் காட்டி அவரிடமிருந்து ஒரு லட்சம் பணம் மற்றும் பல தங்க நகைகளை திருடிக்கொண்டு தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறைக்கு சென்ற எஸ்ஐ ஜாமீனில் வெளிவந்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து பொய்னாச்சி இளைஞரிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட உடனே பொய்னாச்சி இளைஞரும் தான் ஸ்ருதியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதன்பிறகு ஸ்ருதி குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேல்பரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவரைப்பற்றிய உண்மைகள் தெரியவந்துள்ளன. அதன்பேரில் உடுப்பியில் தலைமறைவாக இருந்த ஸ்ருதியை போலீஸார் கைது செய்தனர்.