இந்தியா

"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்

"கம்யூ., கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை'' கேரள பெண் புகார்

webteam

தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,கேரளாவில் கடந்த சனிக்கிழமை பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையை சாலையோரத்தில் பொதுமக்கள் மீட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் குழந்தையின் அம்மாவை கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன்னை 10 மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் வைத்து அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப்பெண் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரி இதழுக்காக அக்கட்சியின் அலுவலகத்துக்கு சென்றதாகவும், அப்போது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர், அந்தப் பெண்ணும், அவரது குடும்பமும் கட்சிக்கு நெருக்கமானவர்கள். இந்த சம்பவம் குறித்து  தீவிரமாக விசாரிக்கப்படும். காவல்துறையும் இந்த விஷயத்தில் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் பாலியல் வன்கொடுமை நிலையமாக மாறி வருவது துரதிஷ்டவசமானது. இதை சொல்ல நான் வருந்துகிறேன். ஆனால் இது தான் உண்மை. இது போன்ற சம்பவங்கள் கேரளாவில் பெண்களுக்கு பாதிப்பில்லை என்பதை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.