நடப்பாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், உத்தரப்பிரதேசம் ராய்பரேலி தொகுதி எம்பி பதவியை தக்கவைத்துக் கொண்டு கேரள மாநிலம் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு, நவம்பர் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி முதல்முறையாக தேர்தலில் களம் காண்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி நேற்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அவருடைய சொத்துப் பட்டியல் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
மொத்த சொத்து மதிப்பு : ரூ.11.98 கோடி
அசையா சொத்து : ரூ.7.74 கோடி
அசையும் சொத்து : ரூ.4.24 கோடி
தங்க நகைகள் : 4.4 கிலோ
கடன் : ரூ.15.75 லட்சம்