பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், கேரள அரசு ஒரு ரூபாய் விலைக் குறைப்பை செய்துள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கர்நாடக தேர்தலின் போது தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அப்போது பெட்ரோல் விலை ரூ77.77 ஆகவும், டீசல் விலை ரூ70.02 ஆகவும் இருந்தது. மே 16 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தினசரி பெட்ரோல் விலை சுமார் 30 காசுகளும், டீசல் விலை 25 காசுகளும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 80 ரூபாய் தாண்டியது. கேரள மாநிலத்தில் பெட்ரோல் விலை 82 ரூபாயை எட்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடுமையான அவதிக்குள்ளானார்கள்.
எதிர்க்கட்சிகளும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மீது விமர்சனங்களை முன் வைத்தன. தங்கள் ஆட்சியில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்த போதும் இவ்வளவு விலை இல்லை என்று காங்கிரஸ் சாடியது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. முடிந்தால் மாநில அரசுகள் தங்களுடைய வரியில் இருந்து குறைத்து கொள்ளட்டும் என்று பாஜக அரசு தரப்பில் சிலர் கூறினர்.
இந்நிலையில், நாட்டிலே முதன்முறையாக கேரள அரசு பெட்ரோல் டீசல் விலையை ஒரு ரூபாய் அளவிற்கு குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு ஜுன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில், “இந்த விலைக் குறைப்பால் மாநில அரசுக்கு ரூ509 கோடி இழப்பு ஏற்படும். இது மத்திய அரசுக்கு நாங்கள் தரும் செய்தி. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், மத்திய அரசு எதுவும் செய்யாமல் இருக்கின்றது” என்றார்.