பெற்றோரை இருட்டு அறைக்குள் பூட்டி வைத்த மகனால் தந்தை பட்டினியால் உயிரிழந்த சோக சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அசம்பாணி என்ற பகுதியை சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (78). வயது முதிர்ந்த இருவரும் தனது இரண்டு மகன்களில் இளைய மகனான ரெஜி என்பவருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த பெற்றோரை தனது வீட்டில் உள்ள ஒரு இருட்டு அறையில் பூட்டி வைத்த மகன் ரெஜி, அவர்களுக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக உணவு, நீர், மருந்துகள் என எதையும் கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது. அருகில் இருந்த அறையில் தனது மனைவி ஜான்சியுடன் வசித்து வந்துள்ள ரெஜி, இருவரும் வேலைக்கு செல்லும்போது, பெற்றோரை சுற்றத்தார் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு நாயையும் வீட்டு முன் கட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
வயது முதிர்ந்தோர் கணக்கெடுப்பிற்காக வந்த அங்கன்வாடி பணியாளர்கள், பெற்றோரை வீட்டிற்குள் வைத்து பூட்டியிருந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க, போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து முதியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ரெஜியின் தந்தையான பொடியன் ஏற்கெனவே இறந்துள்ளதும், ரெஜியின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறியதும் தெரியவந்தது.
இதையடுத்து தாயரை மீட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தையின் உடல் காஞ்சிரப்பள்ளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இறந்த தந்தை பொடியனின் சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் துளியளவு கூட உணவு இல்லை எனவும், குடல்கள் சுருங்கியிருந்ததோடு, தொண்டையும் உலர்ந்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் முதியவர் உணவின்றி பட்டினியால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து மகன் ரெஜி, அவரது மனைவி ஜான்சி ஆகியோரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.