இந்தியா

இடிந்து விழுந்த தற்காலிக ஸ்டேடியம்! 200 பேருக்கு மேல் படுகாயம்! பகீர் வீடியோ!

இடிந்து விழுந்த தற்காலிக ஸ்டேடியம்! 200 பேருக்கு மேல் படுகாயம்! பகீர் வீடியோ!

webteam

கேரள மாநிலத்தில் கால்பந்து போட்டிக்காக தற்காலிகமாக கட்டப்பட்ட ஸ்டேடியத்தின் கேலரி இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டூரில் செவன்ஸ் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் வருகை புரிவார்கள் என்பதால் தற்காலிக ஸ்டெடியம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. நேற்று இரவு மைதானம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்தபோது, ஸ்டேடியத்தில் இருந்த சில கேலரிகள் திடீரென சரிந்தன. அதில் அமர்ந்திருந்த மக்கள் மீது கேலரியின் மரப்பலகைகள் விழுந்ததும் மக்கள் அலறத் துவங்கினர். பலர் பீதியில் ஓட்டம் பிடிக்க, சிலர் மீது மைதானத்தின் விளக்குக் கம்பமும் சரிந்து விழுந்தது. எதிர்ப்புறம் அமர்ந்திருந்தவர்களும் பதற்றத்தில் மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்தனர்.

இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். கால்பந்து விளையாட்டின்மீது ஆர்வம் கொண்டு பல குழுக்களாக வந்த பல குழந்தைகளின் கை, கால்கள் உடைந்தன. காயமடைந்தவர்கள் வண்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும், 3 பேர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு 9.30 மணியளவில் கேலரி இடிந்து விழுந்தபோது, அதில் 1,000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு நாட்களில் இப்பகுதியில் கோடை மழை பெய்ததால், மூங்கில் மற்றும் பாக்கு மரப் பலகைகளால் செய்யப்பட்ட மைதானம் மற்றும் கேலரி ஆகியவை ஈரத்தில் ஊறிப்போய் இந்த விபத்து நிகழ்ந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.