இந்தியா

‘பிராமணர்களுக்கு தனி டாய்லெட்’: வைரலான புகைப்படம்.. நீக்கப்பட்ட பலகை..!

‘பிராமணர்களுக்கு தனி டாய்லெட்’: வைரலான புகைப்படம்.. நீக்கப்பட்ட பலகை..!

rajakannan

பெரும்பாலும் தனியார் மற்றும் பொது இடங்களில் உள்ள கட்டடங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனி கழிப்பிடம் இருக்கும். சில இடங்களில் அதுவும் சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்ட நிலையில் திருநங்கைகளுக்கும் தனி டாய்லெட் இருக்கிறது. கேரளாவில் உள்ள மலப்புரம் அரசு கலைக்கல்லூரியில் திருநங்கை மாணவியான ரியா இஷாவுக்காக, தனி டாய்லெட் உருவாக்கப்பட்டது. இது அவர்களின் வசதிக்காகவும், சுதந்திரத்தை உணர்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், திருச்சூரில் உள்ள கோயில் ஒன்றில் மூன்று டாய்லெட்டுகள் இருந்துள்ளன. அதில் வழக்கம்போல் இரண்டு டாய்லெட்டுகளில் ஆண், பெண் என எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக மூடப்பட்டிருந்த அந்த டாய்லெட் அறையின் மேலே பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் செய்தியாளர் ஒருவர் அந்த கோயிலுக்கு சென்றதாகவும், பிராமணர்களுக்கு என்று தனி டாய்லெட் இருந்துள்ளதை பார்த்து புகைப்படம் எடுத்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியாளர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் படத்தை பதிவிட்டிருக்கிறார். இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் அந்தப்படம் வைரல் ஆனது. ‘டாய்லெட்’இல் கூட சாதி பார்க்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து பிராமணர்களுக்கு என்று எழுதப்பட்டிருந்த பலகையை கோயில் நிர்வாகம் நீக்கியுள்ளது. திருச்சூரில் உள்ள குட்டுமுக்கு மகாதேவ கோயிலில்தான் இந்த டாய்லெட் இருந்துள்ளது.

இதுகுறித்து புகைப்படத்தை பதிவிட்ட பத்திரிகையாளர் அரவிந்த் நியூஸ் மினிட்க்கு அளித்த பேட்டியில், “கோயில் திருவிழா ஒன்றின்போது நான் அங்கு சென்றிருந்தேன். அந்த பலகையை பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. கேரளா போன்ற முற்போக்கு தன்மை கொண்ட மாநிலத்தில் இப்படியொரு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதா என ஆச்சரியப்பட்டேன். அதனால்தான், அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன்” என்று கூறினார்.

கோயிலின் செயலாளர் பிரேமகுமரன் கூறுகையில், “அந்த பலகை 25 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. இந்த பலகையை கோயில் கமிட்டியினர் பார்த்ததில்லை” என்றார். அந்த டாய்லெட்டுகள் கோயில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். பிராமணர்களுக்கு என்று இருக்கும் அந்த டாய்லெட்டை கோயில் குருக்கள் மற்றும் நிர்வாகிகள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதேபோல், பெரும்பாலான கோயில்களில் இதுபோல் குருக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்காக தனி டாய்லெட்டுகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், இதுபோன்று பிராமணர்களுக்கு என்று பலகை வைக்கப்படவில்லை.

இதனையடுத்து, இதேபோன்று இருக்கும் பலகைகளை உடனடியாக நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.