இந்தியா

செல்ஃபி எடுத்த பள்ளி மாணவி ரயில் மோதி உயிரிழப்பு - கேரளாவில் பரிதாபம்

ஜா. ஜாக்சன் சிங்

கேரளாவில் தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த பள்ளி மாணவி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நஃபாட் ஃபட்டா (16). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர் முகமது இஷாம் என்பவருடன் அவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் மதியம் 1 மணியளவில் அங்குள்ள ஃபெரோக்கி பகுதியில் உள்ள ரயில் மேம்பாலம் மீது அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தொலைவில் ரயில் வருவதை கண்ட அவர்கள், அதற்கு முன்பு நின்று செல்ஃபி எடுக்க முயன்றனர்.

செல்ஃபி ஆர்வத்தில் ரயில் அருகே வருவதை அவர்கள் உணரவில்லை. இதில் ரயில் அவர்கள் மீது மோதியதில் இருவரும் கீழே இருந்த ஆற்றில் தூக்கி எறியப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி நஃபாட் ஃபட்டா உயிரிழந்தார். அவரது நண்பர் முகமது இஷாம் பலத்த காயங்களுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஆபத்தான இடங்களில் நின்று செஃல்பி எடுப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாகி விடுகிறது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.