கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கின், செக் மோசடி குற்றச்சாட்டில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் தன்னிடம் 42 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செக் மோசடி செய்ததாக கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவர் கோழிக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 23-ம் தேதி வரவிருந்தது. ஆனால் சரிதா நாயர் ஆஜராகவில்லை, பல முறை சம்மனுக்கு ஆஜராகாத சரிதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஏற்கெனவே ஆலப்புழா, பதனம்திட்டா மற்றும் கோழிக்கோடு நீதிமன்றங்களில் சரிதாவுக்கு எதிராக பிடி வாரண்ட் உள்ளது, நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பல வாரண்டுகள் பிறப்பித்த பின்னரும் சரிதா கைது செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் நீதிமன்றங்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் போலீசார் அவரை கைது செய்து கோழிக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, சரிதாவுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு கோரியது. ஆனால், அவர் நிரபராதி என்றும், பிஜு ராதாகிருஷ்ணன் தன்னை ஏமாற்றினார் என்றும் சரிதா நாயர் தரப்பில் இருந்து வாதம் முன் வைக்கப்பட்டது.சரிதா தரப்பு வாதத்தை ஏற்காத கோழிக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.