இந்தியா

''எல்லாம் இன்சூரன்ஸ் பணத்திற்காக...' - பாம்பை வைத்து மனைவியை கொலை செய்த வழக்கில் திருப்பம்

webteam

தன் மனைவியை தானே பாம்பை வைத்து கொன்றதாக சுராஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ். இவரது மனைவி உத்திரா(25).மே மாதம் 6-ம் தேதி பாம்பு கடித்து
உயிரிழந்துள்ளார். ஆனால் உத்திராவின் மரணத்தில் அவரது தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதமும் உத்திராவுக்கு பாம்பு கடித்து தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் பாம்புக் கடித்ததால் அவர் சந்தேகம் அடைந்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார் சுராஜை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. விசாரணையில் சுராஜ், மூர்க்கன் வகை பாம்பை ரூ.10ஆயிரம் கொடுத்து வாங்கி மனைவியின் படுக்கையில் விட்டு கடிக்க வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விஷப் பாம்மை விலைக்கு கொடுத்து கொலைக்கு உதவிய சுரேஷையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் சுராஜ் இந்த விவகாரத்தில் முரண்பட்டு வந்துள்ளார்.

தன்னை போலீசார் சிக்கவைப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் தன் மனைவியை தானே கொன்றதாக சுராஜ் ஊடகத்தினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மேலும் சாட்சிகளை கண்டறிய வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார் இன்சூரன்ஸ் பணத்திற்காகவே தனது மனைவியை சுராஜ் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கொலை நடப்பதற்கும் சில நாட்கள் முன்னால்தான் மனைவி பெயரில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளார் சுராஜ். இந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியதால் கொலை செய்ததை சுராஜ் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்