உயிரிழந்த மாணவி கூகுள்
இந்தியா

மிகவும் அரிதான மூளை தாக்குதல் நோய்: சுற்றுலா சென்ற இடத்தில் தாக்கிய கிருமி- கேரள மாணவி பலியான சோகம்!

Jayashree A

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கண்ணூர் தோட்டாவை சேர்ந்த ராகேஷ் பாபு, தன்யா தம்பதியரின் மகள் தஷினா(13). கடந்த வாரம் அதீத தலைவலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட தஷினாவை அவரது பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் தஷினாவின் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தஷினா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு அமீபிக் என்செபாலிடிஸ் நோய் (மூளை தொற்று நோய்... ) தாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அமீபிக் மூளை தொற்று: கிரானுலோமாட்டஸ் அமீபிக் என்செபாலிடிஸ் கிரானுலோமாட்டஸ் அமீபிக் என்செபாலிடிஸ் என்பது மிகவும் அரிதான, பொதுவாக மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அபாயகரமான தொற்று ஆகும், இது அகந்தமோபா இனங்கள் அல்லது பாலமுத்தியா மாண்ட்ரில்லாரிஸ், இரண்டு வகையான சுதந்திரமான அமீபாக்களால் ஏற்படுகிறது.

இந்நோய் தஷினா எப்படி தாக்கிருக்கலாம் என்று விசாரித்தப்பொழுது, கடந்த ஜனவரி மாதம், தஷினா பள்ளியிலிருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு குளத்தில் குளித்தப்பொழுது இத்தகைய அமீபா அவரின் உடலில் புகுந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய அமீபா உடலை தாக்கியிருந்தால் 5 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றும், அதை கவனிக்காமல் விட்டால் விரைவில் உடல்நிலை மோசமடைந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் தஷினா சுற்றுலா சென்று வந்த அடுத்த வாரத்தில் அதாவது மே முதல்வாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அறிகுறிகள் தென்படத்துவங்கியுள்ளது. இருப்பினும் அவர் உடல்நிலை மோசமாகி தற்போது இறந்துள்ளார்.

இந்த அரியவகை மூளை தாக்குதல் நோய் பாதிப்பினால் கேரளாவில் சில இறப்புகள் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளன. இந்த நோய் தாக்கினால் மரணம் நிச்சயம் உறுதி என்று சொல்லும் அளவிற்கு மிகவும் ஆபத்தானது.