இந்தியா

கேரளாவின் முதல் திருநங்கை ஆர்ஜே அனன்யா மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

கேரளாவின் முதல் திருநங்கை ஆர்ஜே அனன்யா மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

நிவேதா ஜெகராஜா

கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கி (ஆர்.ஜே) என்று அறியப்பட்ட அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

கேரள மாநிலத்தில் முதல் திருநங்கை ஆர்ஜேவான அனன்யா குமாரி அலெக்ஸ் கொச்சியில் தனது குடியிருப்பில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை, இறந்த நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார். 'இது ஒரு தற்கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது, பிரேத பரிசோதனை செய்த பின்னரே கூடுதல் விவரங்களை கூற முடியும்' என்று கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொச்சியை தளமாகக் கொண்ட ஒரு தனியார் மருத்துவமனையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார் இந்த அனன்யா. ஆனால், இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை தனது சிகிச்சை பதிவுகளை கொடுக்க மறுத்து வருகிறது என்றும் அனன்யா கூறி வந்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஒரு வருடமாக, பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் மீது சமீபத்தில் அனன்யா குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு இரண்டு தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், “ நான் நீண்ட நேரம் நிற்கும்போது, தும்மும்போது, சிரிக்கும்போது அல்லது பல் துலக்கும்போது கூட எனக்கு கடுமையான அசவுகரியங்களை எதிர்கொள்கிறேன். மேலும் சுவாச சிரமங்களையும் அனுபவித்து வருகிறேன்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நான் நினைத்ததற்கு மாறாக இந்த அறுவை சிகிச்சையில் எனது தனிப்பட்ட பகுதி கத்தியால் இரக்கமின்றி வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவின் மற்ற இடங்களில் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. ஆனால், இங்கு நிலைமை வேறு. ஒரு மருத்துவ அலட்சியத்தின் பலியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். அறுவை சிகிச்சைக்கு பிறகு என் பிறப்புறுப்பு பகுதியில் எனக்கு கடுமையான வலி உள்ளது. இது விவரிக்க முடியாதது. சில நேரங்களில் என்னால் உட்கார முடியாது" என்று வேதனையுடன் பேசியிருந்தார் அனன்யா.

மேலும், அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பெயரை வெளியிட்டுருந்தவர், அதே மருத்துவரிடம் சிகிச்சை பெற்று இதேபோன்ற மருத்துவ அலட்சியத்தை எதிர்கொண்ட பிற திருநங்கைகள் உள்ளனர் என்றும் அனன்யா குற்றம்சாட்டியிருந்தார்.

“மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு எதிராக சட்டபூர்வமாக போராடுவேன். எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் என்னுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்த நிலையில்தான் அனன்யா தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த கேரளா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் அனன்யா. கொல்லம் மாவட்டத்தின் பெருமண் பகுதிதான் இவரின் பூர்வீகம். பள்ளிகளில் படிக்கும் காலத்திலேயே தன்னை மூன்றாம் பாலினத்தவராக உணர்ந்த அனன்யா, இதை குடும்ப நபர்கள், நண்பர்களிடம் வெளிப்படுத்த அவர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. விளைவு, மற்ற திருநங்கைகளை போல வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். 12-ம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி பெங்களூரு சென்றார்.

அங்கு திருநங்கை மேக்கப் கலைஞர் ரெஞ்சு ரெஞ்சிமார் என்பவர் அனன்யாவை தத்தெடுக்க, அவரின் பராமரிப்பில் சில ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து வந்தார். பல கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்ந்துவந்த அனன்யாவின் கேரள வரவு இந்தமுறை கொஞ்சம் மாறுதலை கொண்டிருந்தது. தனது திறனை வளர்த்துக் கொண்டு வந்த அனன்யா ரேடியோ ஜாக்கியாக உருவெடுத்தார். அனன்யா இதில் காட்டிய உழைப்பு மற்ற படிகளில் அவர் ஏற வழிவகுத்தது.

இதன்பின் ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல்வேறு வடிவங்களில் பணியாற்ற தொடங்கினார். சமீபத்தில் எர்ணாகுளத்தில் அண்மையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவை தொகுத்து வழங்கியது இவரே. அனன்யா வானொலி வர்ணனையாளர், ஒப்பனைக் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என மீடியாக்களில் பல பணிகளை செய்து வந்தவர். டிவி பிரபலம் என்பதோடு நின்றுவிடாமல், பாலின சமத்துவத்துக்காகத் தொடர்ந்து அனன்யா குரல் கொடுத்தும் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.