இந்தியா

ஜே.என்.யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு கேரளாவில் சென்சார் அனுமதி மறுப்பு!

ஜே.என்.யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு கேரளாவில் சென்சார் அனுமதி மறுப்பு!

Sinekadhara

ஜே.என்.யு-வை மையப்படுத்தும் கதைக்களத்தில் நடிகை பார்வதி நடிப்பில் சித்தார்த் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வர்தமானம்’ மலையாள திரைப்படத்திற்கு, திரைப்பட சான்றிதழுக்கான மத்திய வாரியத்தின் கேரள மண்டலப் பிரிவு அனுமதி மறுத்துள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு ஒரு சுதந்திரப் போராளியை பற்றி ஆராய்ச்சி செய்யப்போகும் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது பயணத்தில் என்னென்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியது இக்கதை.

மேலும் டெல்லி ஜே.என்.யு-வில் படிக்கும் மாணவர்கள் பற்றியும், வெவ்வேறு அரசியல் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளனர் என்பதையும் இப்படம் கூறுகிறது.

இதுபற்றி மூத்த காங்கிரஸ் தலைவரும், இப்படத்தின் திரைக்கதை ஆசிரியருமான ஆர்யதன் ஷௌகாத் கூறுகையில், ‘’படத்தை ஒரு திருத்தக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாக எங்களுக்கு ஓர் அறிவிப்பு வந்தது தவிர, அதில் வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை”என்கிறார்.

மேலும் திரைப்படச் சான்றிதழ் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் சில பகுதிகளை அகற்றிவிட பரிந்துரைத்திருந்தாலும், ஒரு பாஜக தலைவர் மற்றும் வழக்கறிஞர் வி சந்தீப் குமார் உட்பட இரண்டு பேர் மட்டும் அது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் உள்ளது எனக் கூறியதுடன், வலதுசாரி அரசியலை மிகவும் விமர்சிக்கும் விதமாக உள்ளது எனக் கூறியும் நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.

வக்கீல் வி சந்தீப்குமார் தனது ட்வீட்டில், இந்த திரைப்படம் ஜே.என்.யு போராட்டத்தில் பட்டியலினத்தவர் மற்றும் முஸ்லிம்கள் குறித்து அவதூறு பரப்புவதாக இருப்பதாகவும், அது தேச விரோதமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் குறிப்பாக அந்தப் படத்தை தான் ஒரு தணிக்கைக்குழு உறுப்பினராகத்தான் பார்த்ததாகவும், அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆரியதன் என்பதால் மதம் அல்லது கட்சியை பற்றி அவதூறு பரப்பக்கூடும் என்ற நோக்கிலும் எதிர்த்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்யதன், ‘’டெல்லி மாணவர்கள் போராட்டம் பற்றி, இந்திய ஜனநாயகம் பற்றி பேசுவது எப்படி தேச விரோதமானதாகும்? என்று கேள்வி எழுப்பி, தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு தற்போது நீக்கப்பட்டுவிட்டதாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி, "நாம் ஒரு ஜனநாயகமிக்க, மதச்சார்பற்ற, குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திரையிடலுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பே ஒரு திரைக்கதை எழுத்தாளரின் பின்னணியையும் இனத்தையும் ஒருவர் கணிக்கமுடியும்? கலாசாரத் தளத்தில் இதுபோன்ற தெளிவில்லாத அவசர முடிவுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று ஆர்யதன் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் மம்முட்டியால் வெளியிடப்பட்டது. அதில் பார்வதி ஹிஜாப் அணிந்திருப்பதைப் போன்ற படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நடிகர்கள் ரோஷன் மேத்யூ மற்றும் டெய்ன் டேவிஸ் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பென்சி புரொடக்‌ஷன்ஸ்கீழ், பென்சி நாசர் மற்றும் ஆர்யதன் ஷௌகாத் இப்படத்தை தயாரிக்கின்றனர்.