கேரளாவில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை சற்று கால தாமதமாக ஜூன் 8ஆம் தேதி துவங்கியது. இருப்பினும் ஜூன் மாதம் முழுவதுமே கேரளாவில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையவில்லை. ஆனால் தற்போது ஜூலையில் தென்மேற்கு பருவமழை அங்கு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எர்ணாகுளம், ஆலப்புழா, காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூன் மாதம் முழுவதும் மழை அளவு பற்றாக்குறையாக இருந்துவந்த நிலையில் ஜூலை மாதத்தில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30.37 செ.மீ மழை பெய்துள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம்திட்டாவில் 3 வீடுகளும் சேதமடைந்துள்ளன. ஆலப்புழா மற்றும் இடுக்கியில் 3 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு 14 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேர் தஞ்சமடைந்துள்ளனர். ஆலப்புழா மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 24 மணி நேரமும் தாலுகா கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே காசர்கோடு அருகே மழையினால் மரம் சாய்ந்ததில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகி உள்ளார்.
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 7 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் என்றும் மலைப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கும்படியும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். பலத்த காற்று வீசிவருவதால் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரையில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை முதல் மிக கனமழையைக் குறிக்கிறது, ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும். மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரை கனமழையை குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.