லிப்டில் மாட்டிக்கொண்டவர் கூகுள்
இந்தியா

கேரளா: 42 மணி நேரமாக லிஃப்டில் மாட்டிக் கொண்ட நோயாளி

லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட ரவீந்திரன், லிப்டினுள் இருக்கும் பட்டன்கள் அனைத்தையும் அழுத்தி பார்த்துள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை. அலாரம் பட்டனும் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் கத்தியும் பார்த்திருக்கிறார். ஆனால்

Jayashree A

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ரவீந்திரன் நாயர். இவருக்கு முதுகுவலி பிரச்னை இருந்துள்ளது. அதனால் தனது மனைவியான ஸ்ரீலேகாவுடன் மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு மருத்துவர் அவருக்கு பரிசோதனை செய்துவிட்டு எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளனர். அதனால் அவர் தான் மட்டும் தனியாக சென்று எக்ஸ்ரே எடுத்துவிட்டு, மீண்டும் மருத்துவரைப் பார்ப்பதற்கு லிஃப்டில் ஏறியுள்ளார்.

ஆனால் லிஃப்ட் மேலே செல்வதற்கு பதில் கீழே சென்று தரைத்தளத்தில் நின்றுவிட்டது. கதவும் திறக்கவில்லை. இதனால் லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட ரவீந்திரன், அதில் இருக்கும் பட்டன்கள் அனைத்தையும் அழுத்தி பார்த்துள்ளார். ஆனாலும் கதவு திறக்கவில்லை. அலாரம் பட்டனும் செயல்படவில்லை. ஒரு கட்டத்தில் கத்தியும், தன்னை காப்பாற்றும் படியும் கதறியுள்ளார்.

ஆனால் அவரது குரல் லிஃப்டை தாண்டி வெளியே வரவில்லை. உள்ளிருந்த ஃபேனும் வேலை செய்யவில்லை. நேரம் ஆக ஆக... ஒரு கட்டத்தில் அழுதும் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு எந்த பதிலும் வரவில்லை. அவரது மொபைலும் சார்ஜ் இல்லாததால் சுவிட் ஆப் ஆகி இருந்ததால், தனது மனைவியையும் அவரால் தொடர்பு கொள்ளமுடியவில்லை.... என்ன செய்வது என்று தெரியாமல் அதற்குள்ளேயே இருந்துள்ளார். நல்வாய்ப்பாக லிஃப்டின் எதோ ஒரு மூலையிலிருந்து காற்று உள்ளே வந்து கொண்டிருந்ததால் அவருக்கு ஆக்ஸிஜன் கிடைத்துள்ளது.

நேரம் ஆக... ஆக... பசி தாகம் அவரை வாட்டியுள்ளது, இயற்கை உபாதை வேறு அவரை சங்கடப்படுத்தி இருக்கிறது... தாகம் எடுத்த நேரத்தில் தனது நாக்கால் உதட்டை நனைத்துக்கொண்டு சமாளித்திருக்கிறார். அப்பொழுதுதான் அவருக்கு ஒன்று நினைவும் வந்துள்ளது. அவர் லிஃப்டில் மாட்டிக்கொண்டது சனிக்கிழமை... ஆகவே ஞாயிற்று கிழமை மருத்துவமனை விடுமுறை என்பதால் திங்கள் அன்றுதான் லிஃப்ட் திறக்கும் என்பதை நினைத்தவராய், விதியே என்று அதனுள் இருக்கப் பழகிக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், கணவரை காணாத மனைவி ஸ்ரீலேகா, அவர் திரும்பி வேலைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து வீடு திரும்பியுள்ளார். அவரது மொபைலுக்கு கால் செய்து பார்த்து இருக்கிறார். அது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இருப்பினும் கணவர் வந்துவிடுவார் என்று நினைத்த ஸ்ரீலேகா சனிக்கிழமையை கடத்தியுள்ளார். ஞாயிறு மதியம் வரை கணவர் வராததால், கவலையடைந்த ஸ்ரீலேகா, கணவன் காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்து கணவனை தேடத்துவங்கியுள்ளார். தேடுதலில் அதே மருத்துவமனைக்கு மீண்டும் வந்து கணவரை தேடியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையும் கடந்து திங்கள் கிழமை காலை 6 மணி அளவில் மருத்துவமனை லிஃப்ட் ஆபரேட்டர்கள் வந்து லிப்டை திறந்ததும், அதில் ரவீந்திரன் இருப்பதைக்கண்டு அதிர்ந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் தலையிட்டு கேரள சுகாதாரத் துறை, நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மூன்று ஊழியர்களை (இரண்டு லிஃப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் ஒரு கடமை சார்ஜென்ட்) ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.