இரிடியம் கூகுள்
இந்தியா

கேரளா | சதுரங்கவேட்டை பாணியில் நண்பரிடமே ’இரிடியம் மோசடி’க்கு ஸ்கெட்ச்! கொலையில் முடிந்த பேராசை!

லட்சங்களில் முதலீடு செய்தால் கோடியில் சம்பாதிக்கலாம் என்று இரிடியம் கலந்த செப்பு கலசம் பற்றியும் அதில் அதிசய சக்தி இருப்பதாகவும் நண்பருக்கே மோசடி வலை விரித்த நபர்கள். ஆனால், பேரசை சம்பவமானது கொலையில் முடிந்தது.

Jayashree A

சதுரங்க வேட்டை திரைப்படத்தைப் போன்று இரிடியம் மோசடி குறித்து பல்வேறு செய்திகள் இன்றளவும் வெளிவந்தபடி இருந்தாலும், பணத்தாசையில் பலரும் தொடர்ந்து ஏமாந்த வண்ணம் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வுதான் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா திருச்சூர் அருகே சாதிக் என்பவர் ரைஸ்மில் நடத்தி வருகிறார். சாதிக்கிற்கு எப்படியாவது விரைவில் பணக்காரர் ஆகிவிடவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இவ்வாசையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருண் மற்றும் சஷாங்கன் என்ற நண்பர்கள். இருவரும் சாதிக்கிடம், லட்சங்களில் முதலீடு செய்தால் கோடியில் சம்பாதிக்கலாம் என்று ரைஸ் புல்லிங் பற்றியும் அதன் அதிசய சக்தி இருப்பதாகவும் பேசியுள்ளனர்.

இவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்ட சாதிக், அந்த இரிடியம் கலந்த செப்பு கலசத்தை வாங்க விரும்பியுள்ளார். இரிடியம் கலசத்தை வாங்க பல லட்சம் வரை செலவாகும் என்று அருணும், சஷாங்கனும் கூறவும், அதற்கு ஒத்துக்கொண்டு முன்பணமாக ரூபாய் 10 லட்சத்தை சாதிக் அருணிடம் கொடுத்து இருக்கிறார்.

ஆனால் சொன்னபடி அருணும் சஷாங்கனும் அந்த அபூர்வ கலசத்தை சாதிக்கின் கண்ணில் கூட காட்டவில்லை... அதனால் இது குறித்து சாதிக் அருணிடம் தொடர்ந்து இரிடியம் கலசத்தைப்பற்றி கேட்டு வந்துள்ளார்.

ஆனால், நண்பர்கள் பதில் ஏதும் கூறாத நிலையில், ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இருக்கிறார் . இதில் ஆத்திரமடைந்த சாதிக், நண்பர்களை பழிவாங்க நினைத்துள்ளார்.

அதன்படி அருண் மற்றும் சஷாங்கன் இருவரையும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தால் மீதி பணத்தை தருவதாக கூறவும், நண்பர்கள் இருவரும் சாதிக் குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த இருவரையும் சாதிக்கின் கூட்டாளிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதிலேயே சம்பவ இடத்தில் அருண் இறந்துள்ளார். தாக்கியவர்கள் அருணை இழுத்து வந்து நடுரோட்டில் போட்டுவிட்டு ஆம்புலன்ஸிற்கு போன் செய்து, யாரோ ஒருவர் காரில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக வாருங்கள் என்று கூறவும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸும் வந்துள்ளது.

அருணை ஆம்புலன்ஸில் ஏற்றிய அவர்கள், தாங்கள் காரில் வருவதாக கூறவும், ஆம்புலன்ஸும் மருத்துவமனை சென்றுள்ளது. ஆனால் அருணை தாக்கியவர்கள் காரில் வரவில்லை. இருப்பினும் உடல் முழுவதும் காயம் பட்ட அருணை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்த நிலையில் உடனடியாக போலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். போலிசாரின் விசாரனையில் காயம் பட்ட சஷாங் உண்மையை கூறவும், சாதிக்கை போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சாதிக்கின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்திருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.