திருச்சூரில் 23 வயதான உதவி செவிலியராக பணியாற்றி வந்த டோனா சி வர்கீஸ், ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பெரிங்கொட்டுகாராவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் செவிலியர் டோனா வர்கீஸ். இவருக்கு 23 வயது ஆகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அருகிலுள்ள அந்திக்காட் மருத்துவமனையில் செவிலியராக பணிக்குச் சேர்ந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையைக் கவனித்துக் கொள்ளும் பணி கொடுக்கப்பட்டது.
நேற்று கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வீட்டில் யாரோ ஒருவர் மயக்கமடைந்ததைப் பற்றி அந்த அழைப்பு தெரிவித்துள்ளது. உடனே டோனாவும் அஜய் குமாரும் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றபோது திடீரென்று ஒரு கார் ஆம்புலன்ஸ் மீது மோதியுள்ளது., அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது, சாலையோரம் இருந்த ஒரு வீட்டிற்குள் கதவை உடைத்துக் கொண்டு புகுந்தது என்று திரிசூரில் 108 ஆம்புலன்ஸின் ஒருங்கிணைப்பாளர் ஷாபாஸ் கூறுகிறார். ஆனால் இந்த விபத்தில் வீட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
விபத்தில் சிக்கிய செவிலியர் டோனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மார்பு மற்றும் முதுகெலும்புகளில் காயங்கள் இருப்பதாகவும், விலா எலும்புகள் உடைந்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "டோனா வர்கீஸின் மரணம் குறித்து நான் மிகவும் வேதனை அடைகிறேன் "என்று எழுதினார்.