இந்தியா

மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து நெகிழ வைத்த முஸ்லிம் பெற்றோர்

webteam

இஸ்லாமிய பெற்றோர் தங்களின் மகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

இந்தத் திருமண புகைப்படத்தில் இருப்பவர் கேரளாவைச் சேர்ந்தவர். படத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பாரம்பரிய பட்டுப் புடவையை கட்டியிருக்கிறார். நிறைய தங்க நகைகள் கழுத்தில் போட்டிருக்கிறார். ஆசீர்வாதம் பெறுவதற்காக வேண்டி அவரது தாயின் கால்களைத் தொடுவதற்காக குனிந்து கொண்டிருக்கிறார். பார்த்த முதல் பார்வையிலேயே அவர் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதை பலரும் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அவரது தாயார் பெயர், கதீஜா. அவர் புர்கா உடையணிந்துள்ளார். மணமகளின் தலையைத் தொட்டு மகிழ்ச்சியுடன் ஆசிர்வதிக்கிறார். இந்தப் புகைப்படம் இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் மத நல்லிணக்க கதைகளை பேசுகின்றன.

யார் இந்த ராஜேஸ்வரி?

22 வயதான இவர், காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கிறார். இவரது பெற்றோர் அப்துல்லா மற்றும் கதீஜா. முஸ்லிம் தம்பதிகளான இவர்களுக்கு ராஜேஸ்வரி வளர்ப்பு மகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கன்ஹங்காட்டை பூர்வீகமாக கொண்ட விஷ்ணுபிரசாத் என்பவரை மன்யோட் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் ராஜேஸ்வரி. முஸ்லிமாக இருக்கும் ராஜேஸ்வரியின் வளர்ப்பு பெற்றோர், தங்களின் மகளுக்கு பாரம்பரிய இந்து முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்திருப்பதால் இந்தச் செய்தி வைரலாக மாநிலம் முழுவது பரவியுள்ளது. அதனையடுத்து, அவர்களை பலரும் பரவலாக பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூரில் பிறந்த ராஜேஸ்வரியை அப்துல்லாவும், கதீஜாவும் இளம் வயதிலேயே தத்தெடுத்து கொண்டனர். ராஜேஸ்வரியின் உண்மையான பெற்றோர் அப்துல்லாவின் பண்ணையில் பணிபுரிந்தவர்கள். அந்த அறிமுகத்தின் மூலம் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். அதன் பிறகு ராஜேஸ்வரி அவரின் குடும்ப உறவினர்களைக் கூட சந்தித்ததே இல்லை. திருமணத்தின் போதுதான் முதன்முதலாக மீண்டும் சந்தித்துள்ளார்.

“அவள் ஏழு அல்லது எட்டு வயது இருந்தபோது இங்கு வந்தாள். பெற்றோர் இறந்தபோதுகூட அவள் மீண்டும் தஞ்சாவூருக்குப் போகவில்லை. இப்போது அவளுக்கு 22 வயது” என்று மத்ருபூமி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அப்துல்லா கூறியுள்ளார். வளர்ப்பு மகளான ராஜேஸ்வரியை இந்தத் தம்பதி தங்களது மூன்று குழந்தைகளுடன் ஒரு மகளாக வளர்த்து வந்துள்ளனர். அவர் இந்து என்பதால் இந்து முறைப்படியே கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இஸ்லாமிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும் அவர்கள் இந்தப் பெண்ணின் மீது தங்களின் ஆதிக்கத்தை செலுத்தாமல் வளர்த்து வந்ததால் இந்தப் பெற்றோரை அனைவரும் இப்போது பாரட்டி வருகின்றனர்.