இந்தியா

பெற்றோர்களுக்கு நற்செய்தி.. இனி குழந்தைகள் அழுதால் வெளியே போக வேண்டாம்.. ஏன் தெரியுமா?

பெற்றோர்களுக்கு நற்செய்தி.. இனி குழந்தைகள் அழுதால் வெளியே போக வேண்டாம்.. ஏன் தெரியுமா?

JananiGovindhan

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் படத்தை காண ஆவலோடு தியேட்டருக்குள் சென்றால் அங்கு குழந்தைகள் அழுவதும் விளையாடுவதும் மற்ற பார்வையாளர்களுக்கு சற்று முகம் சுழிப்பை ஏற்படுத்தும்.

அதேவேளையில் தியேட்டருக்கு வந்தும் படத்தை பார்க்க முடியாமல் குழைந்தைகளை கவனிக்கவும், அழுதால் தூக்கிக் கொண்டு வெளியேச் செல்வதுமே பெற்றோர்களின் வேலையாகவே இருக்கும்.

ஏனெனில், படத்தில் வரும் ஒலி, ஒளியால் குழந்தைகள் அசவுகரியமாக உணர்வதாலேயே பெரும்பாலும் அழக்கூடும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் அங்கும் இங்கும் சுற்றி சுட்டித் தனம் செய்வதுமாக இருக்கும்.

ஆகவே இப்படியான சூழல் நிலவும் போது பெற்றோருக்கும் சரி, மற்ற பார்வையாளர்களுக்கும் சரி திருப்திகரமாக படத்தை பார்க்கும் வகையில் கேரள மாநில அரசு முக்கியமான அத்தியாவசியமான முன்னெடுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.

அதன்படி, இனி குழந்தைகள் அழுதால் எழுந்து வெளியே செல்லாமல் இருக்கும்படி அழுகை அறை (Crying Room) என்ற ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி என்ற தியேட்டரில் அறிமுகம் செய்துள்ளது கேரள அரசு. இந்த அறைக்குள் சென்று குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டே பெற்றோர்கள் படத்தை மிஸ் செய்யாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் பார்க்கவும் முடியும்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கேரள கலாசாரத்துறை அமைச்சர் வி.என்.வாசவன், “மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தியேட்டர்களில் பெண்கள், குழந்தைகளின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றும் ஒரு பகுதியாக கேரள திரைப்பட மேம்பாட்டு கழகம் (KSFDC) சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல மற்ற தியேட்டர்களிலும் Crying Room வசதியை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சவுண்ட் ஃப்ரூஃப் செய்யப்பட்ட அந்த அழுகை அறையில் , டயப்பர் மாற்றும் வசதி, தொட்டில் போன்ற வசதிகளும் உள்ளன.” எனக் குறிப்பிட்டு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவை தற்போது இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு பலரது பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது.