இந்தியா

பிறந்த நாளன்று பிணமாக கிடந்த மாடல் அழகி! கணவர் கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

பிறந்த நாளன்று பிணமாக கிடந்த மாடல் அழகி! கணவர் கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

ச. முத்துகிருஷ்ணன்

கேரளாவில் பிறந்த நாளன்று பிணமாக கிடந்த மாடல் அழகியால் பரபரப்பு! கணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செருவத்தூரை சேர்ந்தவர் சஹானா. இவர் மாடல் அழகியாக பல நகை விளம்பரங்களில் நடித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு கத்தாரில் பணிபுரிந்து வந்த சஜ்ஜாத், திருமணமான பின் சஹானாவுடன் கோழிக்கோட்டில் உள்ள தனது வீட்டில் வசிக்கத் தொடங்கினார். சஜ்ஜாத்துடன் சேர்ந்து மாமியார் மற்றும் மைத்துனர் தன்னை சித்திரவதை செய்வதாக சஹானா தனது குடும்பத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன் மகள் சஹானாவை அவரது கணவர் சஜ்ஜாத் உடன் தனிக்குடித்தனம் செல்ல அவரது தாய் பரிந்துரைத்தார்.

இதையடுத்து சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கோடு நகரின் பரம்பில் பஜாரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர். இந்நிலையில் நேற்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடினார் சஹானா. ஆனால் அந்த நாள் இவ்வளவு பெரிய சோகத்தில் முடியும் என்று அவரது குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை. நேற்று நள்ளிரவு 1 மணியளவில், சஹானா இறந்து கிடப்பதாக காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு வந்தது. சஹானாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இன்று அவரது கணவர் சஜ்ஜாத்தை போலீஸார் கைது செய்தனர்.

“என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். அவள் கொலை செய்யப்பட்டாள். அவர் கணவர் குடும்பத்தினர் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்று அவள் எப்போதும் அழுது கொண்டிருந்தாள். குடித்துவிட்டு வந்து பிரச்னையை ஏற்படுத்துவது அவள் கணவரின் வழக்கம். கணவரின் பெற்றோரும் சகோதரியும் அவளை சித்திரவதை செய்தனர், பின்னர் ஒரு தனி வீட்டிற்கு செல்ல நான் பரிந்துரைத்தேன். அதன் பிறகும் சஜ்ஜாத் தன்னிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் சஹானா கூறினார். நாங்கள் கொடுத்த 25 சவரன் தங்கம் பயன்படுத்தப்பட்டது”என்று சஹானாவின் தாய் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சஹானா மற்றும் சஜ்ஜாத்தின் பக்கத்து வீட்டுக்காரர் தம்பதியின் வீட்டில் ஏதோ தவறு இருப்பதை முதலில் கவனித்தார். சஹானா பதிலளிக்கவில்லை எனக் கூறி சஜ்ஜாத் உதவிக்காக கூச்சலிட்டதாக வீட்டின் உரிமையாளர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். “நான் அங்கு சென்றபோது சஹானா அவன் மடியில் படுத்திருந்தாள். அவள் பதிலளிக்கவில்லை என்று எங்களிடம் கூறினான். நான் காவல்துறையை அழைக்க பரிந்துரைத்தேன். போலீசார் வந்து, அவர்களின் ஜீப்பில் தான் அவளை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்” என்று தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் பேசிய ஏசிபி சுதர்சன், “சஹானா தமிழ்படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் கொஞ்சம் பணம் பெற்றார். இது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அவள் பிறந்தநாள், ஆனால் சஜ்ஜாத் தாமதமாக திரும்பி வந்தான். அப்போது தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கணவரின் கூற்றுப்படி, அவள் குளியலறையில் இறந்துவிட்டாள். குளியலறையில் பிளாஸ்டிக் கயிறு இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம், ஆனால் தற்கொலை செய்துகொள்வதற்கு இது போதுமானதா என்பது எங்களுக்குத் தெரியாது. இது தற்கொலையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.