கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் முகநூல்
இந்தியா

‘சொல் வழக்கில் கூட சில விஷயங்கள் இருக்கக் கூடாது...’ - கேரள அமைச்சர் வெளியிட்ட அசத்தல் உத்தரவு!

PT WEB

செய்தியாளர் : ரவிக்குமார்

ஏற்றத்தாழ்வு, பாரபட்சம் உள்ளிட்டவற்றால் பிரிவினையே பெருகும்..சொல் வழக்கில் கூட சில விஷயங்கள் இருக்கக் கூடாதென்ற முற்போக்கு எண்ணத்தில், கேரள அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள உத்தரவு, வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. யார் அந்த அமைச்சர்? அப்படி என்ன உத்தரவு? பார்க்கலாம்....

தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்...

- தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பக்கமும், இந்த வாசகங்களைத்தான் தாங்கி நிற்கிறது...

அனைவரும் ஒன்றே என்ற சமத்துவ எண்ணத்தை, மாணாக்கர் மத்தியில் விதைப்பதே இதன் நோக்கம். சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார நிலை என எந்த வகையிலும், ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்ற முழக்கம் எல்லா காலத்திலுமே ஒலித்து வருகிறது... இந்த தடவை கேரளாவிலிருந்து உரக்க ஒலித்திருக்கிறது, சமத்துவ சமுதாயத்துக்கான முற்போக்கு அழைப்பு..

இதை அரசின் உத்தரவாகவே பிறப்பித்திருக்கிறார் கேரள அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன். அம்மாநில பட்டியலின - பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், தேவஸ்வம்போர்டு மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் துறையின் அமைச்சராகத்தான், இந்த ஆணையிட்டிருக்கிறார் கே. ராதாகிருஷ்ணன்.

கே. ராதாகிருஷ்ணன்

யார் இந்த கே. ராதாகிருஷ்ணன்?

சேலக்கரா சட்டமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு, 5 முறை எம்.எல்.ஏ. ஆனவர். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸை 20 ஆயிரத்து111 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர்.

கேரளாவில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே ஒரு வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன் மட்டும்தான். எம்.பி.யாக வெற்றி பெற்றதால், தாம் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகரிடமும் ஒப்படைத்த கே.ராதாகிருஷ்ணன், மன நிறைவு மற்றும் திருப்தியுடன் பதவி விலகுவதாகக் கூறினார்.

இவரது மனநிறைவுக்கும் திருப்திக்கும், கேரள அமைச்சராக கே. ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவுதான், காரணம். இந்த உத்தரவு, வரலாற்றில் இடம்பெறும் அளவுக்கு முற்போக்குத் தனமான முக்கியத்துவத்துடன் உள்ளது. அப்படி என்ன உத்தரவு என்று கேட்கிறீர்களா...?

“காலனி என்ற வார்த்தை கூடாது!”

பட்டியலின மற்றும் பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் இடங்களைக் குறிப்பிட 'காலனி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. சங்கேதம், ஊரு என்ற பிற மலையாள வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது. அரசுத் துறைகளின் எந்தவிதமான ஆவணங்களிலும் கூட, காலனி, சங்கேதம், ஊரு என்ற வார்த்தைகள் இடம்பெறக்கூடாது... இந்த வார்த்தைகள் அவமரியாதையை ஏற்படுத்துவதால், இவற்றுக்குப் பதிலாக, நகர், உன்னதி, பிரக்கிருதி ஆகிய புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, இந்தப் பகுதிகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

இதுதான் சமுதாய சீர்திருத்த வரலாற்றில் சிறப்பிடம் பெறும் உத்தரவு. 'காலனி' என்ற வார்த்தை, காலனியாதிக்க அடிமைத்தனத்தின் அடையாளம் என்பதால், இந்த வார்த்தை பயன்பாட்டை ஒழித்தே ஆக வேண்டும் என்பது, இந்த உத்தரவை பிறப்பித்த அமைச்சராக, கே.ராதாகிருஷ்ணனின் கருத்து.

கேரள அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்த கே. ராதாகிருஷ்ணன், ஒரு கோயில் விழாவில் பங்கேற்றிருந்தபோது, தன் மீது சாதிய பாகுபாடு காட்டப்பட்டு, சாதிய வன்கொடுமை இழைக்கப்பட்டதாக, வேதனையுடன் குற்றம்சாட்டியிருந்தார். இப்போது, சாதிய பாகுபாட்டைப் போக்க, முன்னோக்கி ஒரு அடியெடுத்து வைத்து, சரித்திரத்தில் இடம்பிடித்து புரட்சியாளராகியுள்ளார் கே. ராதாகிருஷ்ணன்.