உயிரிழந்த மாணவி ஷஹானா  file image
இந்தியா

கேரளா: வரதட்சணை கொடுமையால் நின்றுபோன திருமணம்... மருத்துவக் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள  வெஞ்சாரமூடு  பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவருடைய மகள்  ஷஹானா (26). இவர் இளங்கலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு  தற்போது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வந்தார். மருத்துவக் கல்லூரி அருகில் உள்ள  அடுக்குமாடிக் குடியிருப்பில் சக மாணவிகளுடன் தங்கித்தான்  படித்து வந்துள்ளார். ஷஹானாவின் தந்தை இறந்த நிலையில் தாயின் அரவணைப்பு மட்டும் அவருக்கு கிடைத்துள்ளது.

ரூவைஸ்

மருத்துவம் படித்துக்  கொண்டிருந்த  ஷஹானாவுக்கு  சம்பவத்தன்று இரவில் மருத்துவமனையில் பயிற்சி பணி இருந்துள்ளது. ஆனால் அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள் ஷஹானா  தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாகப்  பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஷஹானா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதைத்தொடர்ந்து உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, ஷஹானா உடலில் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது செலுத்தப்படும் மயக்க மருந்து இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மயக்க ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் எனக்  கூறி போலீசாரும் தற்கொலை  வழக்காகப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஷஹானா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியதாக  போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் "என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என்  தந்தை இப்போது என்னுடன் இல்லை. கட்டுக்கட்டாகப் பணம் கொடுக்க என்னிடம் வசதியும் இல்லை. உண்மையான அன்பிற்கு இவ்வுலகில் மதிப்பு இல்லை. எல்லோருக்கும் பணம்தான் முக்கியமாக இருக்கிறது" என எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் எழுதப்படவில்லை.

மேலும் கடிதத்தைக் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து  நடத்திய விசாரணையில், ஷஹானாவின் தாய் மகளுக்காக வரன் தேடி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே மலப்புரம்  மாவட்டத்தைச் சார்ந்த ரூவைஸ் என்ற இளைஞர் அதே அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் ஷஹானாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு இரு வீட்டாரும் பேசி திருமணத்துக்கும் சம்மதித்துள்ளனர். திருமணம் செய்வதற்காக ரூவைசின் வீட்டார் பெருந்தொகையை வரதட்சணையாக கேட்டதாகக் கூறப்படுகிறது. 150 பவுன் நகை ,15 ஏக்கர் நிலம், ஒரு கார் வரதட்சணையாக   கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஷஹானாவின் தாயார் இவ்வளவு வரதட்சணை கொடுக்க முடியாது என ரூவைசின்  வீட்டாரிடம் கூறியதைத் தொடர்ந்து திருமணம் செய்வதிலிருந்து  ரூவைஸ் மனம் மாறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஷஹானா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் மற்றும் உறவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூவைசுக்கு எதிராகப் பல ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்கொலை வழக்கு என்று பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்கொலைக்குத் தூண்டுதல் ,வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் என இரண்டு வழக்குகள் பதிவு செய்து ரூவைஸை குற்றம்சாட்டப்பட்டவராக சேர்த்தனர்.

கைது செய்யப்பட்ட ரூவைஸ்

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  போலீசார்  ரூவைஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கேரள மாநில முதுகலை மருத்துவர்களின் கூட்டமைப்பிலிருந்து ரூவைஸ் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.