அர்ஷாத், சுரேஷ்குமார் கூகுள்
இந்தியா

மனிதம் மரணிக்கவில்லை! மயங்கி கிடந்த பெண்;அருகில் தவித்த குழந்தை! ஓடிப்போய் உதவிய ஓட்டுநர்,நடத்துநர்!

பேருந்தில் பயணிக்கும் பொழுது, யாசகம் கேட்பவர்கள், உடல்நலம் சரியில்லாமலிருப்பவர்கள், வயோதியர்கள், பசிக்கு அழும் குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்கள் இப்படி பலரையும் கடந்து சென்றிருப்போம். ஒரு சிலரே இப்படி பட்டவர்களுக்கு தேவையான உதவி செய்வர்

Jayashree A

மனித நேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு உதாரணமாய் கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாம் பேருந்தில் பயணிக்கும் பொழுது, யாசகம் கேட்பவர்கள், உடல்நலம் சரியில்லாமலிருப்பவர்கள், வயோதியர்கள், பசிக்கு அழும் குழந்தைகள் ஆதரவற்ற முதியோர்கள் இப்படி பலரையும் கடந்து சென்றிருப்போம். ஆனால் ஒரு சிலரே இப்படி பட்டவர்களுக்கு தேவையான உதவி செய்வதை பார்த்து இருப்போம். அப்படி தான் ஒரு சம்பவம் ஆலப்புழாவை அடுத்த மாவேலிக்கரை பகுதியில் நடந்துள்ளது.

ஆலப்புழாவை அடுத்த மன்னார் குறட்டிக்காடு பகுதியைச் சேர்தவர் 25 வயதான அர்ஷாத் மற்றும் காயம்குளத்தைச்சேர்ந்த 38 வயதான சுரேஷ்குமார் இருவரும் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுனர் நடத்துனராக பணியாற்றி வருகின்றனர்.

மாதிரி படம்

சம்பவ தினத்தன்று இருவரும் ஆலப்புழாவை அடுத்துள்ள மாவேலிக்கரைக்கு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச்சென்ற சமயம், சாலை ஓரம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் மயங்கியநிலையில் கீழே கிடந்துள்ளார். அவரது அருகில் 6 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று தனது தாயாரின் நிலை கண்டு செய்வதறியாமல், அவர் அருகிலேயே அமர்ந்து வீரிட்டு அழுதப்படி இருந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாமலும் சென்றுள்ளனர்.

அச்சமயம் இவர்களின் பேருந்து அந்த இளம்பெண் அருகில் வந்த பொழுது, சிறுவனின் அழுகையைக்கண்டு மனம் இறங்கிய ஓட்டுனரும் நடத்துனரும், பேருந்தை நிறுத்திவிட்டு, மயங்கிய நிலையில் இருந்த இளம்பெண்ணை மீட்டுள்ளனர். மேலும், பேருந்தில் உள்ள பயணிகளின் துணையுடன் அப்பெண்ணிற்கு முதலுதவி செய்து, அதே பேருந்தில் அப்பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதில் பேருந்தில் பயணித்த பயணிகள். சமயத்தில் அப்பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்குக்கொண்டு சென்ற ஓட்டுனர் நடத்துனரை பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் வைரலாகி வருகிறது.