கைதான தன்யா மோகன் ட்விட்டர்
இந்தியா

கேரளா: கோடிக்கணக்கில் மோசடி செய்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்... சொத்துக்களை வாங்கி குவித்தது அம்பலம்!

Jayashree A

கேரளாவின் கொல்லம் பகுதியிலுள்ள திருச்சூரில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவன கிளையொன்று செயல்படுகிறது. இங்கு நெல்லிமுக்கை என்ற பகுதியை சேர்ந்த தன்யா மோகன் என்பவர் உதவி பொது மேலாளராக இருந்து வருகிறார். இவர் இந்த நிறுவனத்தில் கடந்த 18 வருடங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சூர் மணப்புரம் பைனான்ஸ் நிறுவன கிளை

இந்நிலையில் இவர் கடந்த 5 வருடங்களாக டிஜிட்டல் தனிநபர் கடன் கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் எடுத்து வந்துள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. இவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் ஜூலை 23ம் தேதி மணப்புரம் பைனான்ஸ் நிறுவனமே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது.

அந்தப் புகாரில், “தன்யா எங்கள் நிறுவனத்திலிருந்து 19.94 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்” என தெரிவித்திருந்தது. புகார் அளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தன்யா தலைமறைவானார். இதனால் போலீஸார் தன்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையறிந்து தன்யா கொல்லம் கிழக்கு காவல் நிலையத்தில் தானாகவே சரணடைந்தார். அவரிடம் பணம் எங்கே என்று காவலர்கள் விசாரிக்கையில், “பணம் என் பையில்தான் இருக்கிறது எடுத்துக்கொள்ளுங்கள்.... நிலவில் ஐந்து செண்ட் நிலம் வாங்கி இருக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைதான தன்யா மோகன்

அதன் பிறகு போலீசாரின் தீவிர விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, வெளிநாட்டில் வசித்து வரும் தன் கணவர் கணக்கிற்கு ரூ 25 லட்சத்தையும், அவரது தந்தையின் கணக்கிற்கு ரூ 40 லட்சத்தையும் மாற்றி இருக்கிறார் தன்யா.

இதுபோக தன்யாவில் கணக்கில் 80 லட்சம் இருந்துள்ளது. இவர்களன்றி தன்யாவின் உறவினர்களின் கணக்குகளிலும் சில லட்சங்கள் மாறியுள்ளதாக தெரிகிறது. இதில் தன்யாவின் பெயரில் மட்டும் 5 வங்கிக்கணக்குகள் இருப்பதை அறிந்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது ரொக்கம் போக வங்கியில் தங்க வைப்பு, திருச்சூரில் ஒரு வீடு, சொகுசு வாகனங்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என தன்யா செய்த பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன. மேலும் கொல்லம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது வீட்டிற்கு அருகில் புதிய வீடு ஒன்றையும் கட்டியுள்ளார்.

அடுத்தடுத்து தெரியவந்த இந்த திடுக்கிடும் தகவல்களை அடுத்து, இவரிடம் போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இவர் மட்டும்தான் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கிறாரா? அல்லது இவருடன் வேறு ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.