ஐபோனுக்கு பதிலாக சோப்புக் கட்டி ஒன்றும் 5 ரூபாய் நாணயமும் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நூருல் அமீன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஆப்பிள் 'ஐபோன் 12' மாடல் வாங்க ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து டெலிவரிக்கு வந்த அந்த ஐபோன் பார்சலை பிரித்துப் பார்த்த நூருல் அமீன் அதிர்ச்சியடைந்தார். அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக சோப்புக் கட்டி ஒன்றும் 5 ரூபாய் நாணயமும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பார்சலில் வந்தது சோப்பு டப்பா தான் என்பதை, தான் எடுத்த வீடியோ மூலம் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து அந்த பாக்ஸின் மேல் இருந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் வலைதள நிறுவனத்திடம் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அந்த குறிப்பிட்ட ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நூருல் அமீனுக்கு அந்த மொபைலுக்கான தொகை முழுவதுமாக திருப்பியளிக்கப்பட்டது. ஏற்கனவே விற்கப்பட்ட மொபைல் போன் பாக்ஸ்க்குள் சோப்பை வைத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.