கேரளாவின் மூவாடுபுழாவில் பள்ளு பருத்தி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப். 38 வயதான இவர், விரக்தியில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள எண்ணியுள்ளார். அதற்கு முன்னதாக மது அருந்தியவர், மூவாடுபுழாவில் ஆற்றுக்குள் குதித்து உயிரை விட்டுவிடலாம் என்று நினைத்து அங்கு சென்றுள்ளார்.
இதற்காக பாலத்தை கடந்து கீழிறங்கி அங்கிருந்து குதிக்க முடிவு செய்து அங்கிருந்த குடிநீர் வாரிய குழாய்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். முழு போதையும் மனவருத்தமும் துக்கத்தோடு சேர்த்து அவருக்கு தூக்கத்தையும் தந்துள்ளது. தூக்கமா, துக்கமா என்ற எண்ணத்தில் நல்வாய்ப்பாக தூக்கம் வெற்றி பெற்றுவிட்டது.! அதனால், உட்கார்ந்து இருந்தவர் குடிநீர் வாரிய குழாய்களுக்கு அருகே படுத்து தூங்கி இருக்கிறார்.
அப்போது அப்பகுதி வழியாக சென்ற சிலர் ஆபத்தான பகுதியில் ஒருவர் தூங்குவதைக்கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், ஆசிப்பை பத்திரமாக மீட்டு அவரிடம் ஏன் அங்கே தூங்கினீர்கள் என விசாரித்துள்ளனர். விசாரணையில், ஆசிப் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்காக அங்கு வந்ததை கூறவே, அவருக்கு அறிவுரை கூறி, அனுப்பிவைத்துள்ளனர் காவல்துறையினர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.