இந்தியா

அப்பாவி கூலித் தொழிலாளியை தாக்கும் ஆட்டோ டிரைவர் - வைரலான வீடியோ

அப்பாவி கூலித் தொழிலாளியை தாக்கும் ஆட்டோ டிரைவர் - வைரலான வீடியோ

webteam

மேற்குவங்க தொழிலாளியை ஆட்டோ டிரைவர் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

“நீ எங்கிருந்து வருகிறாய்? உன் ஆதார் அட்டையை என்னிடம் காட்டு.. இல்லை என்றால் காவல்துறையை அழைப்பேன்” என ஒரு ஆட்டோ டிரைவர் ஆக்ரோஷமாக 25 வயது மதிக்கத்தக்க இளைஞரிடம் சண்டையிடுகிறார். அதற்கு அந்த இளைஞர் பொறுமையாக, ‘என்ன? என் ஆதார் அட்டையா?’ எனக் கூறியபடி அவரது மணி பர்சை திறக்கிறார். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர் அந்த இளைஞர் கன்னத்தில் ‘பொளேர்’ என்று அறைவிடுகிறார். அதைக் கண்டு அந்த இளைஞர் செய்வதறியாமல் அப்படியே உறைந்துப் போய் நிற்கிறார். இந்த உரையாடல்கள் யாவும் வைரலாக மாறியுள்ள வீடியோவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோதான் மலையாள சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேற்குவங்க கூலித்தொழிலாளியான அந்த இளைஞரை கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கன்னத்தில் அறையும் போது அருகே இருந்த நபர்கள் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன் அதனை வீடியோ ஆகவும் பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கேமிராவில் பதிவாகியுள்ள இந்தச் சம்பவம் திருவனந்தபுரம் முக்கோலா பகுதியில் நடந்ததாக தெரியவந்துள்ளது. அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் சுரேஷ் எனக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மேற்குவங்க இளைஞரின் பெயர் கெளதம் மண்டல் என்பதும் அவர் தனது போனை ரீ சார்ஜ் செய்ய வந்தபோது இந்தச் சண்டை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

https://www.facebook.com/joe.matts.50/videos/2735668609856675/

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததையடுத்து, கேரளாவிலுள்ள விழிஞ்சம் மாவட்ட போலீசார் சுரேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.