இந்தியா

மதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது

மதுவில் சயனைடு கலந்து கொன்ற வழக்கில் ஜூலி மீண்டும் கைது

webteam

கேரளாவை உலுக்கிய தொடர் சயனைடு கொலை வழக்கில் கைதாகியுள்ள ஜூலி, மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செய்த நான்காவது கொலைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கில் ஜூலிக்கு மேலும் 14 நாள் போலீஸ் காவலை நீட்டித்து தாமரைசேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கூடத்தாயி கிராமத்தில் சயனைடு மூலம் நடந்துள்ள ஆறு கொலைகள் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கோழிக்கோடு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையை சேர்ந்த ஜூலி என்பவரை கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

விசாரணையில் ஜூலி, உணவில் சயனைடு கலந்து கொடுத்து, தனது மாமியார், மாமனார், கணவர், இரண்டாவது கணவரின் மனைவி, 10 மாத குழந்தை என ஆறு பேரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது. 2002ம் ஆண்டு துவங்கி 2016ம் ஆண்டு வரையிலான இந்த சயனைடு தொடர்கொலை சம்பவத்தில் ஜூலியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் தினமும் திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஏற்கனவே தனது மாமியார் அன்னம்மா, மாமனார் டாம் தாமஸ், தனது கணவர் ரோய் தாமஸ் ஆகிய மூன்று பேரை உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த வழக்குகளில் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் ஆஜர்படுத்தப்பட்டு அவர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தார். இதையடுத்து, நான்காவது சயனைடு கொலைக்காக கடந்த மாதம் மீண்டும் ஜூலி கைது செய்யப்பட்டார். 

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, ஜூலியின் மாமியாரான அன்னம்மாவின் சகோதரரான மாத்யூவை மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஜூலி ஏற்கனவே தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். அதாவது, தனது கணவரான ரோய் தாமஸ்சை உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த நிலையில், அவரது உடலை உடற்கூராய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், ரோயி தாமஸ்சின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறிய மாத்யூவை மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றதாக ஜூலி ஏற்கனவே தெரிவித்திருந்தார், இதையடுத்து இந்தத் தொடர் சயனைடு கொலை சம்பவத்தில், மதுபானத்தில் சயனைடு கலந்து கொடுத்து தனது மாமியாரின் சகோதரர் மாத்யூ கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்காவது முறையாக கைது செய்யப்பட்டார் ஜூலி.

சயனைடு தொடர் கொலை சம்பவத்தில் நான்காவதாக கைது செய்யப்பட்ட ஜூலியின் போலீஸ் காவல் கடந்த திங்கள்கிழமையோடு முடிவடைந்ததால் தாமரைசேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜூலி ஆஜர்படுத்தப்பட்டார். ஜூலியிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக சிறப்பு புலனாய்வு போலீஸாரின் மனுவை ஏற்ற நீதிமன்றம் ஜூலியை மேலும் 14 நாள் போலீஸ் காவலில் விடுத்து உத்தரவிட்டது. போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஜூலியிடம் தொடர் சயனைடு கொலை தொடர்பாக விசாரணையை  சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.