இந்தியா

பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலகத்தில் படுத்துத்தூங்கிய ஐபிஎஸ் அதிகாரி - வைரல் மேன்  

பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலகத்தில் படுத்துத்தூங்கிய ஐபிஎஸ் அதிகாரி - வைரல் மேன்  

webteam

தனது பணிக்காலத்தின் கடைசி நாளில் தனது அலுவலகத்திலேயே படுத்துறங்கிய கேரள ஐபிஎஸ் அதிகாரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கேரளாவில் பணியாற்றி வந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஜாகோப் தாமஸ். இவர் 1985 ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருந்தாலும் முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே காக்கி உடையை அணிந்தார் ஜாகோப் தாமஸ். தனது பணிக்காலத்தின் அதிக நாட்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பொறுப்பு வகித்தார். தற்போது கேரள அரசின் உலோக கருவிகள் தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான மெட்டல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து வந்த ஜாகோப் தாமஸ் நேற்று ஓய்வு பெற்றார்.

கேரளாவின் கோட்டயத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜேக்கப் தாமஸ். கேரள மாநிலத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தவர். முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரின் ஊழல்களையும் ஜேக்கப் தாமஸ் கிளறி எடுத்தார். குறிப்பாக அப்போதைய முதல்வர் உம்மன் சாட்டிக்கே செக் வைக்கும் விதமாக பார் ஊழல் வழக்கையும் கிளறி எடுத்து விசாரித்தார். பின்னர் தீயணைப்புத்துறைக்கு மாற்றப்பட்டார் ஜேக்கப். அந்தத்துறையிலும் அதிரடி காட்டியதால் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் மாற்றலானார். இப்படிப் பல துறைகளில் அதிரடி காட்டிய ஜேக்கப் தாமஸ் நேற்று ஓய்வு பெற்றார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடைசி நாள் ஆரம்பித்துள்ளது, ”நான் எனது அலுவலக அறையில் உறங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் பரசுராமரின் கோடரியால், வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கப் போவதாகவும் தெரிவித்து புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். பணிக்காலத்தின் கடைசி நாளில் தனது அலுவலகத்திலேயே படுத்துறங்கிய கேரள ஐபிஎஸ் அதிகாரிக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்