இந்தியா

கேரளா: இடுக்கி மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

கேரளா: இடுக்கி மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

kaleelrahman

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான, மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகைதரத் துவங்கியுள்ளதால் சுற்றுலா தொடர்பான தொழில்கள் செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மாநில எல்லைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா தொடர்பான தொழில்கள் அனைத்தும் முடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தளர்வுகளின் அடிப்படையில் இடுக்கியில் சுற்றுலா தலங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளன.

இதில், குறிப்பாக இடுக்கி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமான மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாட்டுப்பெட்டி, இரவிகுளம் தேசிய பூங்கா என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும், கொரோனா விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர், கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை தரத் துவங்கியுள்ளதால், முடங்கியிருந்த சுற்றுலா தொடர்பான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தங்கும் விடுதி, உணவு விடுதிகள், ஆட்டோ, கார் ஜீப் ஓட்டும் தொழில் அனைத்தும் புத்துயிர் பெறத் துவங்கியுள்ளன. இதையடுத்து அதை நம்பி பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.